மகளிர் டி20 உலகக்கோப்பை: வோல்வார்ட் போராட்டம் வீண்; ஆறாவது முறையாக கோப்பை வென்றது ஆஸி!

Updated: Sun, Feb 26 2023 21:44 IST
Australia beat South Africa by 19 runs to win sixth T20 World Cup title ! (Image Source: Google)

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் எட்டாவது சீசன் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்க அணி, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய மகளிர் அணியை எதிர்கொண்டது அதன்படி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. 

இதையடுத்து களமிறங்கிய அந்த அணியில் தொடக்க வீராங்கனைகள் அலிசா ஹீலி - பெத் மூனி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அலிசா ஹீலி 18 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஆஷ்லே கார்ட்னர் அதிரடியாக விளையாடி 2 சிச்கர், 2 பவுண்டரி என 29 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த கிரேஸ் ஹாரிஸ் மற்றும் கேப்டன் மெக் லெனிங் ஆகியோர் தலா 10 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

இருப்பினும் மறுமுனையில் தொடந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெத் மூனி அரைசதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இரண்டு முறை அரைசதம் கடந்த முதல் வீராங்கனை எனும் சாதனையைய்யும் பெத் மூனி படைத்தார். தொடர்ந்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பெத் மூனி 53 பந்துகளில் 9 பவுண்டரி ஒரு சிக்சர் என 74 ரன்களைச் சேர்த்தார்.

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஷனைம் இஸ்மையில், மரிசேன் கேப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

அதன்பின் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் டஸ்மின் பிரிட்ஸ் 10 ரன்களிலும், மரிசேன் கேப் 11 ரன்களிலும் கேப்டன் சுனே லூஸ் 2 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த லாரா வோல்வார்ட் - சோலே ட்ரையான் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். 

இப்போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய லாரா வோல்வார்ட் அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் 25 ரன்களை எடுத்திருந்த ட்ரையான் ஆட்டமிழக்க, முக்கியமான கட்டத்தில் 61 ரன்களைச் சேர்த்து அணிக்கு நம்பிக்கையளித்து வந்த லாரா வோல்வார்ட்டும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். 

பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளும் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாததால் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன, 6ஆவது முறையாக உலகக்கோப்பையைக் கைப்பற்றி சாதனைப்படைத்தது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை