AUS vs WI, 1st ODI: ஸ்மித், க்ரீன் அரைசதம்; விண்டீஸை வீழ்த்தி ஆஸி அபார வெற்றி!
வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது.
அதன்படி ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அலிக் அதானாஸ் - ஜஸ்டின் க்ரீவ்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் க்ரீவ்ஸ் ஒரு ரன்னிலும், அலிக் அதானாஸ் 5 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் களமிறங்கிய கேசி கார்டி ஒருமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வர, மறுபக்கம் களமிறங்கிய கேப்டன் ஷாய் ஹோப் 12 ரன்களுக்கும், ஹோட்ஜ் 11 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். அதன்பின் கார்டியுடன் இணைந்த ரோஸ்டன் சேஸும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தியதுடன், இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். அதன்பின் 59 ரன்களுக்கு ரோஸ்டன் சேஸ் ஆட்டமிழக்க, மறுபக்கம் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேசி கார்டி 6 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 88 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டாகி சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார்.
இதனைத்தொடர்ந்து வந்த ஹெய்டன் வால்ஷ், ரொமாரியோ செப்ஃபர்ட், மேத்யூ ஃபோர்ட், குடகேஷ் மோட்டி ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 231 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அறிமுக வீரர் ஸேவியர் பார்ட்லெட் 4 விக்கெட்டுகளையும், சீன் அபோட், கேமரூன் க்ரீன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரெலிய அணிக்கு டிராவிஸ் ஹெட் - ஜோஷ் இங்க்லிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டிராவிஸ் ஹெட் 4 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இணைந்த இங்லிஷ் - கேமரூன் க்ரின் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜோஷ் இங்லிஸ் அரைசதம் கடந்து அசத்தினார்.
அதன்பின் 10 பவுண்டரி, ஒரு சிக்சர் என 65 ரன்கள் எடுத்த நிலையில் ஜோஷ் இங்லிஸ் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் - கேமரூன் க்ரீனுடன் இணைந்து அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இருவரும் தொடர்ந்து பவுண்டரிகளாக விளாச இருவரது பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைக் கடந்ததுடன், இருவரும் இப்போட்டியில் தங்களது அரைசதங்களைப் பதிவுசெய்தனர்.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்டீவ் ஸ்மித் 79 ரன்களையும், கேமரூன் க்ரீன் 77 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 38.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரில் முன்னிலை வகித்துள்ளது.