AUS vs WI, 3rd ODI: வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா!

Updated: Tue, Feb 06 2024 12:52 IST
AUS vs WI, 3rd ODI: வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா! (Image Source: Google)

வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமன்செய்த நிலையில், ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் வென்றிருந்தது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று கான்பெர்ராவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர் அலிக் அதானாஸை தவிற மற்ற வீரர்களும் அனைவரும் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டை இழந்தனர். 

இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 24.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 86 ரன்களுக்கு ஆல் அவுடானது. இதில் அதிகபட்சமாக அலிக் அதானாஸ் 32 ரன்களைச் சேர்த்திருந்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸேவியர் பார்ட்லெட் 4 விக்கெட்டுகளையும், லான்ஸ் மோரிஸ் மற்றும் ஆடம் ஸாம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அச்சத்தினர். 

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஜேக் ஃபிரெசர் - ஜோஷ் இங்கிலிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேக் ஃபிரெசர் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 41 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். 

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஆரோன் ஹார்டியும் 2 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோஷ் இங்கிலிஸ் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 35 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 6.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியதுடன் வெஸ்ட் இண்டீஸ் அணியையும் ஒயிட்வாஷ் செய்து அசத்தியது. இப்போட்டியில் அபாரமாக பந்துவீசிய அறிமுக வீரர் ஸேவியர் பார்ட்லெட் இப்போட்டியின் ஆட்டநாயகனாகவும், இத்தொடரின் தொடர்நாயகன் விருதையும் வென்றார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை