சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சாதனைகளை குவித்த டிராவிஸ் ஹெட்!
ஸ்காட்லாந்தில் முதல் முறையாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணியானது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்று முடிந்த முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலையைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தினார். மேற்கொண்டு இப்போட்டியில் 17 பந்துகளில் அரைசதத்தை கடந்த டிராவிஸ் ஹெட், டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனையையும் படைத்து அசத்தினார். அதன்படி இந்த போட்டியில் டிராவிஸ் ஹெட் பவர் பிளே ஓவர்களில் மட்டுமே 73 ரன்களைக் குவித்திருந்தார்.
இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் பவர்பிளேவில் அதிக ரன்களை விளாசிய வீரர் எனும் சாதனையை டிராவிஸ் ஹெட் படைத்துள்ளார். முன்னதாக கடந்த 2020ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 போட்டியில் அயர்லாந்து அணி கேப்டன் பால் ஸ்டிர்லிங்ஸ் பவர்பிளே ஓவர்களில் 67 ரன்களைக் குவித்திருந்ததே இதுநாள் வரை சாதனையாக இருந்த நிலையில், அதனைத் தற்போது டிராவிஸ் ஹெட் முறியடித்துள்ளார்.
இது தவிர, டிராவிஸ் ஹெட் பேட்டிங் செய்த சமயத்தில் பவர்பிளே ஓவரில் மட்டும் 16 பவுண்டரிகளை விளாசித் தள்ளினார். இதன்மூலம் ஆடவர் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் ஒரு அணி வீரர் பவர்பிளேவில் அதிக பவுண்டரிகளை விளாசியது இதுவே முதல்முறையாகும். முன்னதாக, கடந்த 2018 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் பவர்பிளேயின் போது 14 பவுண்டரிகளை அடித்து முதலிடத்தில் இருந்த நியூசிலாந்தின் கொலின் முன்ரோவை ஹெட் பின்னுக்கு தள்ளியுள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
மேற்கொண்டு இந்த இந்த இன்னிங்ஸின் போது டிராவிஸ் ஹெட் 17 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்து அசத்தி இருந்தார். இதன்மூலம் ஆஸ்திரேலியாவுக்காக சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் அதிவேக அரைசதமடித்த முதல் வீரர் எனும் மார்கஸ் ஸ்டொய்னிஸின் சாதனையை ஹெட் சமன்செய்துள்ளார். முன்னதாக, கடந்த 2022 டி20 உலகக் கோப்பையில், இலங்கைக்கு எதிராக மார்கஸ் ஸ்டோய்னிஸ் 17 பந்துகளில் அரை சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.