WI vs AUS, 1st T20I: ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன் அறிவிப்பு; மெக்குர்க், ஓவனுக்கு இடம்!
WI vs AUS, 1st T20I: வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்திருந்த மேத்யூ ஷார்ட் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் தற்போது டெஸ்ட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியானது மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணியை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்து அசத்தியுள்ளது.
இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நாளை முதல் நடைபெறவுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியானது ஜமைக்காவில் உள்ள சபினா பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கான இரு அணிகளும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில் இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இப்போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்திருந்த நட்சத்திர வீரர் மேத்யூ ஷார்ட் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக ஆல் ரவுண்டர் மிட்செல் ஓவன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
மேற்கொண்டு இன்று அறிவிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனிலும் மிட்செல் ஓவனுக்கு இடம் கிடைத்துள்ளது. இதுதவிர்த்து சமீப காலமாக சர்வதேச கிரிக்கெட்டில் சோபிக்க தவறிய ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் மற்றும் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள கேமரூன் க்ரீன் ஆகியோர்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்களுடன் கிளென் மேக்ஸ்வெல், ஆடம் ஸாம்பா, ஜோஷ் இங்கிலிஸ் உள்ளிட்டோரும் தங்கள் இடங்களை தக்கவைத்துள்ளனர்.
Also Read: LIVE Cricket Score
ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன்: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், ஜோஷ் இங்கிலிஸ், கேமரூன் கிரீன், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஓவன், கூப்பர் கோனொலி, பென் டுவார்ஷுயிஸ், சீன் அபோட், நாதன் எல்லிஸ், ஆடம் ஸாம்பா