ஐசிசி தரவரிசை: சூர்யகுமார் தொடர்ந்து முதலிடம்; விராட், ரோஹித் முன்னேற்றம்!

Updated: Wed, Jan 11 2023 19:36 IST
Australia, India players gain big in latest rankings update! (Image Source: Google)

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது

இந்நிலையில், ஆடவருக்கான கிரிக்கெட் தரவரிசையை ஐசிசி அறிவித்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி, பாகிஸ்தான் - நியூசிலாந்து, ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நிறைவடைந்த பின்னர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஆடவருக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

டெஸ்ட் தரவரிசை

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடி இரட்டை சதத்தை நெருங்கிய உஸ்மான் கவஜா டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் 8ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளார். டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் லபுசாக்னே முதல் இடத்தில் உள்ளார். இந்தியா தரப்பில் கார் விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பந்த் 7ஆவது இடத்திலும், கேப்டன் ரோஹித் சர்மா 10ஆவது இடத்திலும் உள்ளனர்.

டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் முதல் இடத்தில் உள்ளார். இந்திய பந்து வீச்சாளர்கள் பும்ரா 3ஆவது இடத்திலும், அஷ்வின் 4ஆவது இடத்திலும் உள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொதப்பிய ககிசோ ரபடா ஒரு இடம் சரிந்து 7ஆவது இடத்துக்கு வந்துள்ளார். டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவிசையில் இந்தியாவின் ஜடேஜா, அஷ்வின் ஆகியோர் முதல் இரு இடங்களில் உள்ளனர்.

ஒருநாள் தரவரிசை

ஒருநாள் பேட்டர்கள் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். இலங்கை அணிக்கு எதிராக அதிரடியாக சதம் அடித்து அசத்திய இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலி 2 இடங்கள் முன்னேறி 6ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளார். அதேபோட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோஹித் சர்மா ஒரு இடம் முன்னேறி 8ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் நியூசிலாந்தின் டிரெண்ட் போல்ட் முதல் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹசில்வுட், மிட்செல் ஸ்டார்க், ஆஃப்கானிஸ்தானின் ரஷித் கான், நியூசிலாந்தின் மேட் ஹென்றி ஆகியோர் 2 முதல் 5 இடங்களில் உள்ளனர். பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய அணி தரப்பில் முதல் 10 இடங்களுக்கும் ஒருவரும் இல்லை.

ஒருநாள் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ஷகிப் அல் ஹசன், முகமது நபி, மெஹதி ஹசன், ரஷித் கான், மிட்செல் சாண்ட்னெர் ஆகியோர் முதல் 5 இடங்களில் உள்ளனர்.

டி20 தரவரிசை

டி20 பேட்டர்கள் தரவரிசையில் இலங்கை அணிக்கு எதிராக அதிரடி சதம் அடித்து அசத்திய சூர்யகுமார் யாதவ் முதல் இடத்தை தக்க வைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக முகமது ரிஸ்வான், டெவான் கான்வே, பாபர் ஆசாம், ஐடன் மார்க்ரம் ஆகியோர் 2 முதல் 5 இடங்களில் உள்ளனர்.

டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவுக்கு எதிரான தொடரில் சொதப்பிய ஹசரங்கா முதல் இடத்தை பறிகொடுத்துள்ளார். இதனால் ரஷித் கான் முதல் இடத்துக்கு முன்னேறினார். ஆதில் ரஷித், ஜோஷ் ஹசில்வுட், சாம் கர்ரன் 3 முதல் 5 இடங்களில் உள்ளனர்.

டி20 ஆல்ரவுண்டர்கள் தரவிசையில் ஷகிப் அல் ஹசன், முகமது நபி, ஹர்த்திக் பாண்டியா, சிக்கந்தர் ராசா, வனிந்து ஹசரங்கா ஆகியோர் முதல் 5 இடங்களில் உள்ளனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை