ஐசிசி டெஸ்ட் தரவரிசை: இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

Updated: Fri, Jan 05 2024 19:21 IST
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்! (Image Source: Google)

பாகிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றது. அதனால் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றிய அந்த அணி ஜனவரி 3ஆம் தேதி சிட்னி நகரில் தொடங்கிய 3வது போட்டியிலும் 3 நாட்களின் முடிவில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.

அதனால் ஒய்ட் வாஷ் வெற்றியை பதிவு செய்து பாகிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் இருந்து வரும் கௌரவத்தை ஆஸ்திரேலியா தக்க வைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் அதே ஜனவரி 3ஆம் தேதி கேப் டவுன் நகரில் நடைபெற்று முடிந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றி பெற்றது.

அதனால் தென்னாப்பிரிக்காவில் 13 வருடங்கள் கழித்து முதல் முறையாக ஒரு தொடரை சமன் செய்து இந்தியா அசத்தியது. குறிப்பாக முதல் இன்னிங்ஸில் வலுவான தென் ஆப்பிரிக்காவை 55 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி இந்தியா அதிரடியான வெற்றி பெற்றது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளுக்கான அப்டேட் செய்யப்பட்ட புதிய தரவரிசை பட்டியலை தற்போது ஐசிசி வெளியிட்டுள்ளது. 

அதில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான 2ஆவது போட்டியில் வென்றும் இந்தியாவை பின்னுக்கு தள்ளியுள்ள ஆஸ்திரேலியா உலகின் புதிய நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக முன்னேறி சாதனை படைத்துள்ளது. அதாவது முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவிடம் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்ததன் காரணமாக 2ஆவது போட்டியில் வென்றும் ஐசிசி தரவரிசையில் இந்தியா சில புள்ளிகளை இழந்தது.

மறுபுறம் பாகிஸ்தானுக்கு எதிராக முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றதால் கூடுதல் புள்ளிகளை பெற்றுள்ள ஆஸ்திரேலியா தற்போது இந்தியாவை முந்தி நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. முன்னதாக கடந்த வருடம் இங்கிலாந்தின் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியாவை தோற்கடித்த ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

அதை விட 2023 உலகக் கோப்பையில் தொடர்ந்து 10 வெற்றிகளை பெற்று அதிரடியாக செயல்பட்டு வந்த இந்தியாவை மீண்டும் இறுதிப் போட்டியில் தோற்கடித்த ஆஸ்திரேலியா 6ஆவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை