இலங்கைக்கு பரித்தொகையை நன்கொடையளித்தது ஆஸ்திரேலியா கிரிக்கெட்!

Updated: Thu, Aug 11 2022 16:22 IST
Australia men's team donates prize money from Sri Lanka tour to support nation in economic crisis (Image Source: Google)

இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு சென்று கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இலங்கை - ஆஸ்திரேலியா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என ஆஸ்திரேலிய அணி வென்றது. 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி 3-2 என்ற வென்ற நிலையில், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமனடைந்தது.

ஆஸ்திரேலிய தொடரை ஒருவழியாக நடத்திமுடித்த இலங்கை, ஆசிய கோப்பை தொடரை நடத்த முடியாது என்று கூறிவிட்டது. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் ஆசிய கோப்பை தொடரை தங்களால் நடத்தமுடியாது என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் கூறிவிட்டதால், ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது.

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில், உணவு, பெட்ரோல், டீசல், ஆடை ஆகிய அடிப்படையாக அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருட்களின் விலை உச்சத்தில் உள்ளது. அதனால் இலங்கை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஏழை, நடுத்தர குடும்பங்களும், குழந்தைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை குழந்தைகளுக்கும், ஏழை குடும்பங்களுக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி உதவ முன்வந்துள்ளது. 

இலங்கை கிரிக்கெட் தொடரில் விளையாடியதில் கிடைத்த பரிசுத்தொகை முழுவதையும் அப்படியே இலங்கையில் இருக்கும் யுனிசெஃப்-க்கு (UNICEF) வழங்குவதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும் யுனிசெஃப் தூதருமான பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் பொதுவாகவே உதவும் குணம் கொண்டவர். கரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியாவில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டபோது  50,000 அமெரிக்க டாலர்கள் நன்கொடை அளித்தது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை