IND vs AUS, 3rd T20I: இந்தியாவை வீழ்த்தி முன்னிலைப் பெற்றது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலிய மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. மும்பை டிஒய் பாட்டீல் மைதானத்தில் இந்த தொடர் நடந்துவருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், 2ஆவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றதால் 1-1 என தொடர் சமனில் இருந்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3ஆவது டி20 போட்டி இன்று மும்பையிலுள்ள பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனையும் கேப்டனுமான அலிசா ஹீலி ஒரு ரன்னில ஆட்டமிழந்தார். முதல் 2 போட்டிகளிலும் 80 ரன்களுக்கும் அதிகமாக குவித்த பெத் மூனியை இந்த போட்டியில் இந்த போட்டியில் 30 ரன்களுக்கு வீழ்த்தினார் தேவிகா வைத்யா.
அதன்பின்னர் தஹிலா மெக்ராத், கார்ட்னெர் ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினாலும், எல்லிஸ் பெர்ரி அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். அபாரமாக பேட்டிங் செய்த அவர் 47 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 75 ரன்களை குவித்தார். கிரேஸ் ஹாரிஸ் அதிரடியாக 18 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 41 ரன்களை விளாச, 20 ஓவரில் 172 ரன்களை குவித்த ஆஸ்திரேலிய மகளிர் அணி, 173 ரன்கள் என்ற சவாலான இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்தது.
இதையடுத்து கடின இலக்கை துரத்திய இந்திய மகளிர் அணியில் ஸ்மிருதி மந்தனா ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸும் 16 ரன்களோடு வெளியேற இந்திய அணி தடுமாறியது. இருப்பினும் ஷஃபாலி வர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஷஃபாலி வர்மா அரைசதம் கடந்த கையோடு 52 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் 37 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தேவிகா வைத்யா, ரிச்சா கோஷ் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளும் சோபிக்க தவறினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய தரப்பில் டிரேசி பிரௌன், ஆஷ்லே கார்ட்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன்மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தியதுடன், 2-1 என்ற கணக்கில் டி20 தொடரிலும் முன்னிலைப் பெற்றது.