AUS vs WI, 2nd ODI: விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஜேக் ஃபிரெசர் - ஜோஷ் இங்கிலிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜேக் ஃபிரெசர் 10 ரன்களில் விக்கெட்டை இழக்க அவரைத்தொடர்ந்து ஜோஷ் இங்லிஸும் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தும் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் இணைந்த கேமரூன் க்ரீன் - மார்னஸ் லபுஷாக்னே இணை ஓரளவு தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தினர்.
அதன்பின் கேமரூன் க்ரீன் 33 ரன்களிலும், மார்னஸ் லபுஷாக்னே 26 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த மேத்யூ ஷார்ட் 41 ரன்களுக்கும், ஆரோன் ஹார்டி 26 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சீன் அபோட் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்ததுடன் 69 ரன்களைச்சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் 258 ரன்களை எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் குடகேஷ் மோட்டி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர்கள் அலிக் அதானாஸ் 11 ரன்களுக்கும், ஜஸ்டின் க்ரீவ்ஸ் 8 ரன்களுக்கும், ஒட்டெலி 8 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய ஷாய் ஹோப் 29 ரன்களுக்கும், கேசி கார்டி 40 ரன்களுக்கும், ரோஸ்டன் செஸ் 25 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆஅட்டமிழந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களாலும் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாததால் 43.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 175 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஜோஷ் ஹசில்வுட், சீன் அபோட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.