ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்: இறுதிப்போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலியா vs இந்தியா?

Updated: Thu, Dec 29 2022 13:18 IST
Australia Thrash South Africa By Innings & 182 Runs To Wrap Up Series, Close In On WTC Final Spot (Image Source: Google)

மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 189 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது தென்னாபிரிக்கா அணி. அடுத்ததாக முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு வார்னர் 200 ரன்கள், அலெக்ஸ் கேரி 111 ரன்கள் மற்றும் ஸ்மித் 85 ரன்கள் அடிக்க, அணியின் ஸ்கோர் 575 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்த போது டிக்ளேர் செய்தது.

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 386 ரன்கள் முன்னிலை பெற்றது. பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி நான்காம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா பவுலர்களின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து வந்தது. 65 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்த போது, பவுமா மற்றும் வெரின்னே இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த ஜோடி 5வது விக்கெட்டிற்கு 63 ரன்கள் சேர்த்தனர்.

அடுத்துவந்த பேட்ஸ்மேன்கள் எவரும் நிலைத்து நிற்கவில்லை. சொற்பரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டு இறுதியில் 204 ரன்களுக்கு தென்னாப்பிரிக்கா அணி ஆல்அவுட் ஆனது. இதனால் இன்னிங்ஸ் மற்றும் 182 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது ஆஸ்திரேலிய அணி. இதன் மூலம் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிபட்டியலில் ஏற்கனவே முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா அணி, 2ஆவது டெஸ்டில் பெட்ரா வெற்றியுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. 132 புள்ளிகள் பெற்று 78.57% வெற்றிகளை பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்திய அணி 99 புள்ளிகள் உடன் 58.93% வெற்றிகளுடன் இருக்கிறது. இரண்டாவது டெஸ்டில் தோல்வியை தழுவிய தென்னாப்பிரிக்கா அணியின் வெற்றி சதவீதம் தற்போது குறைந்திருக்கிறது. 64 புள்ளிகளுடன் 53.33 சதவீத வெற்றிகள் மட்டுமே பெற்று 3வது இடத்தில் நீடிக்கிறது.

முதல் 3 அணிகளின் இடத்தில் மாற்றம் இல்லை. ஆனால் வெற்றி சதவீதத்தில் தென்னாபிரிக்கா அணிக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. இது இந்தியாவிற்கு மிகப்பெரிய சாதகமான ஒன்றாக இருக்கும். ஏனெனில் இப்போதிருக்கும் நிலையில், இந்தியா இறுதிப்போட்டிக்கு நுழைவதை தென் ஆபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளால் மட்டுமே பாதிப்பை உண்டாக்க முடியும். தென் ஆபிரிக்கா அணி ஆஸ்திரேலியாவுடன் நடக்கும் 3ஆவது டெஸ்டிலும் தோல்வி அடைந்தால் இந்திய அணி ஒரு காலை இறுதிபோட்டிக்குள் வைத்துவிடும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை