சேஸிங்கில் அதிக ரன்கள்- மார்க் சாப்மேனை ஓரங்கட்டிய கேமரூன் க்ரீன்!
Cameron Green Record: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் கேமரூன் க்ரீன் தொடர்நாயகன் விருதை வென்றார்.
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் செயின்ட் கிட்ஸில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 170 ரன்களில் ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஷிம்ரான் ஹெட்மையர் 52 ரன்களையும், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 35 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் பென் துவார்ஷுயிஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஓவன் 37 ரன்களையும், கேமரூன் க்ரீன் 32 ரன்களையும், டிம் டேவிட் 30 ரன்களையும் சேர்க்க அந்த அணி 17 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி, வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது.
இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய பென் துவார்ஷுயிஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார். அதேசமயம் இத்தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட கேமரூன் க்ரீன் தொடர் நாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியில் கேமரூன் க்ரீன் 32 ரன்களைச் சேர்த்ததன் மூலம் புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். இத்தொடரில் அவர் சேஸிங்கின் போது மொத்தமாக 205 ரன்களைச் சேர்த்தார். இதில் மூன்று அரைசதங்களும் அடங்கும்.
இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தொடரில் சேஸிங்கின் போது அதிக ரன்களை குவித்த வீரர் எனும் நியூசிலாந்தின் மார்க் சாப்மேன் சாதனையை கேமரூன் க்ரீன் முறியடித்துள்ளார். முன்னதாக மார்க் சாப்மேன் கடந்த 2023ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் 203 ரன்களை அடித்திருந்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்சமயம் கேமரூன் க்ரீன் அதனை முறியடித்து அசத்தியுள்ளார்.
டி20 தொடரில் சேஸிங்கின் போது அதிக ரன்கள்
- 205 – கேமரூன் கிரீன் vs வெஸ்ட் இண்டீஸ், 2025*
- 203 – மார்க் சாப்மேன் vs பாகிஸ்தான், 2023
- 197 – கெவின் டி'சோசா vs செர்பியா,2022
- 189 – உதய் ஹாதிஞ்சர் vs இந்தோனேசியா,2022
- 186 – டிம் சீஃபர்ட் vs பாகிஸ்தான், 2025
Also Read: LIVE Cricket Score