தி ஹண்ரட் : தொடரிலிருந்து விலகிய வார்னர், ஸ்டோய்னிஸ்!
இங்கிலாந்து, வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் சார்பில் புதிய முயற்சியாக ஆண்கள், பெண்கள் அணிகள் பங்கேற்கும் ‘தி ஹண்ரட்’ கிரிக்கெட் தொடர் வருகிற ஜூலை மாதம் நடத்தப்பட உள்ளது. ஒரு இன்னிங்ஸிற்கு 100 பந்துகள் மட்டுமே வீசப்படும் இத்தொடர் கடந்த ஆண்டே நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
வரும் ஜூலை 21 ஆம் தேதி முதல் தொடங்கும் இத்தொடரின் முதலாவது சீசனில் நான்கு அணிகள் பங்கேற்கின்றன. மேலும் இத்தொடரில் பங்கேற்க எல்லீஸ் பெர்ரி உள்ளிட்ட 11 ஆஸ்திரேலிய வீராங்கனைகள் உள்பட 24 வெளிநாட்டு வீராங்கனைகள் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
இதில் இந்தியா சார்பில் ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா, ஷஃபாலி வர்மா ஆகியோர் பங்கேற்க இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் இத்தொடரிலிருந்து விலகுவதாக ஆஸ்திரேலிய அணி நட்சத்திர வீரர்கள் டேவிட் வார்னர், மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கூறுகையில்,‘அறிமுக சீசன் ஹண்ரட் தொடரில் வார்னர், ஸ்டோய்னிஸ் இடம்பெறாமாட்டர்கள் என்பது வருத்தமளிக்கிறது. இருப்பினும் அவர்களது முடிவை நாங்கள் ஏற்கிறோம். அதேசமயம் தொடரில் மற்ற வீரர்கள் விளையாடுவர் என்பதையும் உறுதி செய்கிறோம்’ என்று தெரிவித்துள்ளது.