ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்த ஜோ ரூட்; லபுஷாக்னே, ஸ்மித் சரிவு!

Updated: Wed, Jun 21 2023 16:46 IST
Image Source: Google

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்துள்ள நிலையில், டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் முதல் மூன்று இடங்களில் இருந்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சரிவை சந்தித்துள்ளனர்.

ஆஷஸ் தொடர் தொடங்குவதற்கு முன்பாக ஆஸ்திரேலிய அணியின் மார்னஸ் லபுஷாக்னே முதலிடத்திலும், ஸ்டீவ் ஸ்மித் இரண்டாமிடத்திலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சதம் விளாசிய டிராவிஸ் ஹெட் மூன்றாம் இடத்திலும் இருந்தனர். ஒரே அணியைச் சேர்ந்த மூன்று வீரர்கள் ஐசிசி தரவரிசையில் முதல் 3 இடங்களை பிடித்திருந்தது இதுவே முதல்முறையாக அமைந்தது.

அதுமட்டுமல்லாமல் லபுஷாக்னே ஆட்டமிழந்தால் ஸ்டீவ் ஸ்மித், ஸ்டீவ் ஸ்மித் ஆட்டமிழந்தால் டிராவிஸ் ஹெட் என்றும் அடுத்தடுத்து களமிறங்கினர். ஆனால் இவர்கள் மூவருமே இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டியில் சரியாக விளையாடவில்லை. இந்த நிலையில் ஐசிசி தரப்பில் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது.

அதில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சதம் விளாசிய ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேபோல் வில்லியம்சன் இரண்டாமிடத்தில் உள்ளார். முதல் இடத்தில் இருந்த லபுஷாக்னே மூன்றாமிடத்திலும், 3ஆவது இடத்தில் இருந்த டிராவிஸ் ஹெட் 4ஆவது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளனர். அதேபோல் இரு இன்னிங்ஸிலும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழக்க ஸ்டீவ் ஸ்மித் 2ஆவது இடத்தில் இருந்து சரிந்து 6ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

அதேபோல் ஆஸ்திரேலிய அணி தரப்பில் முதல் இன்னிங்ஸில் சதமும், 2ஆவது இன்னிங்ஸில் அரைசதம் விளாசிய உஸ்மான் கவாஜா 7ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்திய அணி தரப்பில் விபத்தில் காயமடைந்து ஓய்வில் உள்ள ரிஷப் பந்த் மட்டும் 10வது இடத்தில் உள்ளார். தொடர்ந்து ரோஹித் சர்மா 12ஆவது இடத்திலும், விராட் கோலி 14ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். 

பந்துவீச்சை பொறுத்தவரை முதலிடத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் நீடிக்கிறார். மேலும் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2ஆம் இடத்திலும், காகிசோ ரபாடா 3ஆம் இடத்திலும் உள்ளனர். இதில் இந்திய பந்துவீச்சாளர்கள் ஜஸ்ப்ரித் பும்ரா 8ஆவது இடத்திலும், ரவீந்திர ஜடேஜா 9ஆவது இடத்திலும் நீடிக்கிறார்கள்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை