AUSW vs SAW, 3rd ODI: பேட்டிங், பவுலிங்கில் கலக்கிய மெக்ராத்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸி!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற நிலையில், இரு இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று சிட்னியில் நடைபெற்றது.
அதன்படி சிட்னியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் லிட்ச்ஃபீல்ட் 5 ரன்களிலும், எல்லி பெர்ரி 24 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் அலிசா ஹீலி - பெத் மூனி இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்களது அரைசதத்தைப் பதிவுசெய்தனர். அதன்பின் 60 ரன்கள் எடுத்த நிலையில் அலிசா ஹீலி விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கி அதிரடியாக விளையாடிய தஹ்லியா மெக்ராத் 44 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ஆஷ்லே கார்ட்னர், சதர்லேண்ட், வர்ஹாம், அலனா கிங், கிம் கார்த் என சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
இருப்பினும் இந்த இன்னிங்ஸில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பெத் மூனி 82 ரன்களைச் சேர்த்து களத்தில் இருந்தார். இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் மசாபடா கிளாஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியில் கேப்டன் லாரா வோல்வார்ட், போஷ் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் இணைந்த தஸ்மின் பிரிட்ஸ் - சுனே லூஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அச்சமயம் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தமதமானது. அதன்பின் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி தென் ஆப்பிரிக்க அணிக்கு 31 ஓவர்களில் 238 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன்பின் இன்னிங்ஸைத் தொடர்ந்து அந்த அணியில் போஷ் 34 ரன்களிலும், தஸ்மின் பிரிட்ஸ் 31 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர்.
இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி வீராங்கனைகள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் அந்த அணி 24.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தும், 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய அலானா கிங் 4 விக்கெட்டுகளையும், தஹ்லியா மெக்ராத் மற்றும் கிம் கார்த் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
இதன்மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றி அசத்தியது. இப்போட்டியில் பேட்டிங் பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட தஹ்லியா மெக்ராத் ஆட்டநாயகியாக தேர்வுசெய்யப்பட்டார்.