காயத்திலிருந்து மீளும் ஆவேஷ் கான்; ஐபிஎல் இலக்கு!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்தாலும், இரண்டாவது போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணியின் கூடுதல் பந்துவீச்சாளராக தேர்வு செய்யப்பட்டிருந்த ஆவேஷ் கான், பயிற்சியின் போது காயமடைந்தார். இதையடுத்து அவர் நாடு திரும்பி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
இதற்கிடையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றனர். இதனால் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஆவேஷ் கான் குணமடைந்து தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய ஆவேஷ் கான், “தற்போது எனது காயம் குணமடைந்துள்ளது. இதனால் வருகிற 19ஆம் தேதி முதல் 23ஆம் தேதிவரை பெங்களூருவிலுள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெறவுள்ளேன்.
அதன்பின் 23ஆம் தேதி நடைபெறும் உடற்தகுதி தேர்வினை மேற்கொள்ளவுள்ளேன். அதில் தகுதியடையும் பட்சத்தில், ஐக்கிய அரபு அமீரகம் சென்று ஐபிஎல் தொடரில் பங்கேற்பேன்” என்று உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஆவேஷ் கான் 14 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.