லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக சாதனைகள் படைத்த ஆயுஷ் பதோனி!
தர்மசாலாவில் உள்ள இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இப்போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தோல்வியைத் தழுவினாலும், அந்த அணியின் இளம் வீரர் ஆயூஷ் பதோனி இறுதிவரை போராடி ரன்களைச் சேர்த்த விதம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இப்போட்டியில் 40 பந்துகளை எதிர்கொண்ட ஆயூஷ் பதோனி 5 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 74 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்திருந்தார். இந்நிலையில் இப்போட்டியின் மூலம் ஆயூஷ் பதோனி சில சாதனைகளையும் படைத்துள்ளார்.
நிக்கோலஸ் பூரனின் சாதனை முறியடிப்பு
அதன்படி பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் ஆயூஷ் பதோனி 5ஆம் இடத்தில் களமிறங்கி அரைசதம் கடந்ததன் மூலம், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக 5வது இடத்தில் அல்லது அதற்குக் கீழே பேட்டிங் செய்து அதிக ஐம்பதுக்கும் மேற்பட்ட ரன்களைச் சேர்த்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். முன்னதாக நிக்கோலஸ் பூரன் 5 முறை 50+ ரன்களை அடித்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது ஆயுஷ் பதோனி 6 முறை இதனைச் செய்து புதிய சாதனை படைத்துள்ளார்.
எல்எஸ்ஜி அணிக்காக 5வது இடத்திற்கு கீழே பேட்டிங் செய்து அதிக 50+ ஸ்கோரை அடித்த வீரர்கள்
- ஆயுஷ் படோனி - 6
- நிக்கோலஸ் பூரன் – 5
- தீபக் ஹூடா - 2
- மார்கஸ் ஸ்டோய்னிஸ் - 2
- அர்ஷத் கான் - 1
மார்கஸ் ஸ்டொய்னிஸ், டி காக் சாதனை முறியடிப்பு
இப்போட்டியில் ஆயூஷ் பதோனி 74 ரன்களைச் சேர்த்ததன் மூலம், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் குயின்டன் டி காக் போன்ற வீரர்களை முந்தி 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். முன்னதாக மார்கஸ் ஸ்டொய்னிஸ் லக்னோ அணிக்காக 952 ரன்களைச் சேர்த்து மூன்றாம் இடத்தில் இருந்த நிலையில், தற்போது ஆயூஷ் பதோனி 960 ரன்களைச் சேர்த்து மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இதற்கு முன் குயின்டன் டி காக் 901 ரன்களைச் சேர்த்து இந்த பட்டியலில் 4ஆம் இடத்தைப் பிடித்திருந்தார். அதேசமயம் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர் எனும் பெருமையை அந்த அணியின் முன்னாள் கேப்டன் கேஎல் ராகுல் பெற்றுள்ளார். அவர் 38 போட்டிகளில் 1410 ரன்கள் எடுத்து முதாலிடத்தில் உள்ளார். அதேசமயம் நிக்கோலஸ் பூரன் 40 போட்டிகளில் 1267 ரன்களைச் சேர்த்து இரண்டாம் இடத்தில் உள்ளார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்
- கேஎல் ராகுல் - 1410 ரன்கள்
- நிக்கோலஸ் பூரன் - 1267 ரன்கள்
- ஆயுஷ் பதோனி - 960 ரன்கள்
- மார்கஸ் ஸ்டோய்னிஸ் - 952 ரன்கள்
- குயின்டன் டி காக் - 901 ரன்கள்
இப்போட்டி குறித்து பேசினால் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியில் அதிகபட்சமாக பிரப்ஷிம்ரன் சிங் 91 ரன்களையும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 45 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அதிரடியாக விளையாடிய ஷஷாங்க் சிங் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 33 ரன்களையும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 15 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்களைச் சேர்த்தது.
Also Read: LIVE Cricket Score
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில், இறுதிவரை போராடிய ஆயூஷ் பதோனி 74 ரன்களையும், அப்துல் சமத் 45 ரன்களையும் சேர்த்த நிலையிலும், அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.