வார்த்தை மோதலில் பாபர் - ஷாஹீன்; பாகிஸ்தான் அணியில் குளறுபடி!

Updated: Sun, Sep 17 2023 15:38 IST
வார்த்தை மோதலில் பாபர் - ஷாஹீன்; பாகிஸ்தான் அணியில் குளறுபடி! (Image Source: Google)

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கியது. 6 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று முடிவில் ஆப்கானிஸ்தான், நேபாளம் அணிகள் வெளியேற்றப்பட்டன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 4 நாடுகள் சூப்பர்4 சுற்றுக்குள் நுழைந்தன. 

சூப்பர்4 சுற்று முடிவில் இந்தியா (2 வெற்றி, ஒரு தோல்வி), இலங்கை (2 வெற்றி, ஒரு தோல்வி) தலா 4 புள்ளிகள் பெற்றன. ரன்-ரேட் அடிப்படையில் இந்தியா முதலிடமும், இலங்கை 2ஆவது இடமும் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்நிலையில் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. 

இத்தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியது. இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றதால் வாய்ப்பை இழந்தது. ஹாரிஸ் ரவூஃப், நசீம் ஷா ஆகியோரின் காயம் பாகிஸ்தான் அணிக்கு ஆசிய கோப்பையில் பின்னடைவை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமும், வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடியும் வார்த்தை மோதலில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தோல்விக்கு பிறகு அணி வீரர்கள் மத்தியில் பேசிய பாபர் அசாம் சீனியர் வீரர்களின் ஆட்டத்திறன் குறித்து கேள்வி எழுப்பினார். சூப்பர் ஸ்டார்களாக இருப்பதை நிறுத்துங்கள். 

உலகக்கோப்பையை நீங்கள் இழந்தால் யாரும் உங்களை சூப்பர் ஸ்டாராக கருதமாட்டார்கள் என்று எச்சரித்ததாக கூறப்படுகிறது. அப்போது ஷாஹீன் அஃப்ரிடி குறுக்கிட்டு பொதுவாக பேச வேண்டாம். நன்றாக ஆடுபவர்களை விமர்சனம் செய்வது ஏன்? நன்றாக விளையாடிய வீரர்களின் செயல் திறனை குறைந்தபட்சம் பாராட்ட வேண்டும் என்றார்.

இதற்கு பதில் அளித்த பாபர் அசாம் யார் நன்றாக விளையாடினார்கள். யார் சரியாக ஆடவில்லை என்பது எனக்கு தெரியும் என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது முகமது ரிஸ்வான் உள்ளிட்ட மூத்த வீரர்கள் இருவரையும் சமாதானப்படுத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை