ரோஹித், விராட் விட பாபர் ஆசாமின் பேட்டிங் தனித்துவமானது - கௌதம் கம்பீர்!

Updated: Sat, Sep 23 2023 21:10 IST
ரோஹித், விராட் விட பாபர் ஆசாமின் பேட்டிங் தனித்துவமானது - கௌதம் கம்பீர்! (Image Source: Google)

கடந்த 2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 உலகக்கோப்பை ஆகிய இரு தொடர்களிலும் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றதற்கு கவுதம் கம்பீரின் ஆட்டம் மிக முக்கியமானது. முக்கியமான போட்டிகள் சீனியர் வீரர்கள் சொதப்பிய நிலையில், தனியாளாக போராடி இந்திய அணியின் வெற்றிக்கு உதவியவர் கவுதம் கம்பீர். இந்த நிலையில் இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் 2 வாரங்களில் நடக்கவுள்ளது.

இந்த உலகக்கோப்பை தொடர் குறித்து பேசிய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், “இந்த உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக இருப்பார் என்று நினைக்கிறேன். இந்த உலகக்கோப்பை தொடரை சுவாஸ்யமாக்க கூடிய வீரராகவும் பாபர் அசாம் இருப்பார் என்று நினைக்கிறேன்.

சர்வதேச கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா, விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஜோ ரூட் ஆகியோர் பேட்டிங் செய்யும் போது, அவர்களுக்கு மட்டும் பந்தை எதிர்கொள்ள அதிக நேரம் கிடைப்பதாக தோன்றும். ஆனால் இவர்கள் அனைவரை விடவும் பாபர் அசாமிற்கு கூடுதலாக நேரம் கிடைப்பதை பார்க்க முடிகிறது. பாபர் அசாமிடம் தனித்துவமான திறமை இருக்கிறது. அதனால் வரும் உலகக்கோப்பை தொடரில் பாபர் அசாமின் பேட்டிங் தீயாய் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். 

அண்மையில் நடைபெற்ற ஆசியக் கோப்பை தொடரில் நேபாள அணிக்கு எதிரான அபாரமான சதத்தை விளாசினார். இதுவரை 108 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பாபர் அசாம், 5409 ரன்களை குவித்துள்ளார். மொத்தமாக 19 சதங்கள், 28 அரைசதங்களை விளாசி இருக்கிறார். அதேபோல் நடப்பாண்டில் மட்டும் 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பாபர் அசாம் 2 சதங்கள், 6 அரைசதங்கள் உட்பட 745 ரன்களை விளாசி இருக்கிறார். 

அதுமட்டுமல்லாமல் 2016ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் பாகிஸ்தான் அணி முதல்முறையாக இந்திய மைதானங்களில் விளையாட உள்ளது. இதனால் மறக்க முடியாத சம்பவத்தை செய்ய பாகிஸ்தான் அணி வீரர்கள் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை