ஹாசிம் அம்லா சாதனையை சமன்செய்ய காத்திருக்கும் பாபர் ஆசாம்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வகையில் பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இணைந்து முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. மொத்தம் 4 போட்டிகள் கொண்ட இத்தொடரில் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.
இத்தொடரின் இறுதிப்போட்டியானது கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் இன்று (பிப்ரவரி 14) நடைபெறும் நிலையில், இப்போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் நியூசிலாந்து அணி ஏற்கெனவே இத்தொடரில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. அதேசமயம் பாகிஸ்தான் அணியும் கடந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வெற்றியைப் பெற்றுள்ளது.
இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேற்கொண்டு இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இத்தொடரில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் ரன்களை சேர்க்க முடியாமல் தடுமாறி வருகிறார். இருப்பினும் இப்போட்டியில் அவர் ரன்களை சேர்க்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
அதன்படி இந்தப் போட்டியில் பாபர் ஆசாம் 10 ரன்கள் எடுத்தால், ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 6000 ரன்கள் எடுத்த வீரர் உலக சாதனையை சமன் செய்வார். இதுவரை விளையாடிய 125 போட்டிகளில் 122 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர் 5990 ரன்களை எடுத்துள்ளார். தற்போது, ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 6000 ரன்களை எடுத்த சாதனை ஹாஷிம் அம்லாவின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது, அவர் 123 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மைல் கல்லை எட்டும் பட்சத்தில் பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்த சாதனையை படைக்கும் 10ஆவது வீரர் எனும் பெருமையையும் பாபர் ஆசாம் படைக்கவுள்ளார். இதற்கு முன் இன்ஸமாம் உல் ஹக், முகமது யூசுப், சயீத் அன்வர், ஷாஹித் அஃப்ரிடி, சோயிப் மாலிக், ஜாவேத் மியாண்டாத், யூனிஸ் கான், சலீம் மாலிக், முகமது ஹபீஸ் மற்றும் இஜாஸ் அகமது ஆகியோர் மட்டுமே ஒருநாள் கிரிக்கெட்டில் 6000 மேற்பட்ட ரன்களை அடித்துள்ளனர்.
ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 6000 ரன்கள் எடுத்த டாப் 5 வீரர்கள்
- ஹாஷிம் ஆம்லா (தென் ஆப்பிரிக்கா) - 123 இன்னிங்ஸ்
- விராட் கோலி (இந்தியா) - 136 இன்னிங்ஸ்கள்
- கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து) - 139 இன்னிங்ஸ்
- டேவிட் வார்னர்(ஆஸ்திரேலியா) - 139 இன்னிங்ஸ்
- ஷிகர் தவான் (இந்தியா) - 140 இன்னிங்ஸ்
Also Read: Funding To Save Test Cricket
பாகிஸ்தான் ஒருநாள் அணி: ஃபகார் ஸமான், பாபர் ஆசாம், சவுத் ஷகீல், முகமது ரிஸ்வான்(கேப்டன்), சல்மான் ஆகா, தயப் தாஹிர், குஷ்தில் ஷா, ஷஹீன் அஃப்ரிடி, முகமது ஹஸ்னைன், நசீம் ஷா, அப்ரார் அகமது, கம்ரான் குலாம், ஃபஹீம் அஷ்ரஃப், ஹாரிஸ் ரவுஃப், அகிஃப் ஜாவேத், உஸ்மான் கான்