ஆஸ்திரேலியா டி20 தொடரில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் பாபர் ஆசாம்!
பாகிஸ்தான் அணியானது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணியானது 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதையடுத்து ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரானது நாளை முதல் நடைபெற்றவுள்ளது. அந்தவகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியானது நாளை பிரிஸ்பேனில் உள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஒருநாள் தொடரை வென்ற கையோடு பாகிஸ்தான் அணியானது இந்த தொடரை எதிர்கொள்கிறது. அதேசமயம், ஒருநாள் தொடரை இழந்த கையோடு இத்தொடரை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலிய அணியானது, இத்தொடரில் அதற்கான பதிலடியை கொடுக்குமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இந்த டி20 தொடரின் மூலம் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து சமீபத்தில் ஓய்வை அறிவித்த இந்திய ஜாம்பவான்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரது சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அந்தவகையில் இந்த தொடரில் பாபர் ஆசாம் 87 ரன்களை எடுக்கும் பட்சத்தில், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற இந்திய அணியின் ரோஹித் சர்மாவின் உலக சாதனையை முறியடித்து புதிய சாதனையைப் படைப்பார்.
அதன்படி, 123 போட்டிகளில் 116 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள பாபர் ஆசாம் 4145 ரன்கள் எடுத்துள்ளார், மேலும் இந்த வடிவத்தில் அதிக ரன்களின் அடிப்படையில் தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் இந்திய அணியின் ரோஹித் சர்மா 159 போட்டிகளில் விளையாடி 4231 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். அதேசமயம் இந்திய அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான விராட் கோலி 125 போட்டிகளில் விளையாடி 4188 ரன்களுடன் இரண்டாவது இரடத்தைப் பிடித்துள்ளார். இருப்பினும் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடருடன் இவர்கள் இருவரும் ஓய்வை அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர டி-20 கிரிக்கெட்டில் 11000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டுவதற்கு பாபர் அசாமிற்கு 58 ரன்கள் தேவைப்படுகிறது. அதன்படி இதுவரை 304 போட்டிகளில் 293 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள பாபர் ஆசாம் 10,942 ரன்களை குவித்துள்ளார். ஒருவேளை நாளைய ஆட்டத்தில் அவர் இந்த மைல் கல்லை எட்டும் பட்சத்தில், டி20 போட்டிகளில் அதிவேகமாக 11,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை அவர் பெறுவார். தற்போது இந்த சாதனை இந்திய அணியின் விராட் கோலி தன்வசம் வைத்துள்ளார். அவர், 354 டி20 போட்டிகளில் 11000 ரன்களை கடந்ததே இதுநாள் வரை சாதனையாக இருந்து வருகிறது.
Also Read: Funding To Save Test Cricket
அதேசமயம் இந்த போட்டியில் பாபர் ஆசம் 49 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் 15000 ரன்களை எட்டும் வாய்ப்பையும் பெற்றுள்ளார். மேற்கொண்டு இந்த மைல் கல்லை அவர் எட்டும் பட்சத்தில் பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 15 ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை குவித்த 5ஆவது வீரர் எனும் பெருமையை அவர் பெறுவார். ஆவருக்கு முன் இன்ஸமாம் உல் ஹக், யுனிஸ் கான், முகமது யூசுஃப் மற்றும் ஜாவெத் மியான்தத் ஆகியோர் மட்டுமே பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் இந்த மைல் கல்லை எட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.