உலகக்கோப்பையை வென்றால் பாபர் ஆசாம் பிரதமராவார் - சுனில் கவாஸ்கர்!

Updated: Sat, Nov 12 2022 10:43 IST
Image Source: Google

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் ஜாஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோரது அதிரடியால் இந்திய அணியை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி. இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளவிருக்கிறது.

கடந்த 1992ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் மோதி இருந்தன. இதில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி பட்டம் வென்றது. தற்போது 30 வருடங்களுக்குப் பிறகு அதே மண்ணில் டி 20 உலகக் கோப்பையில் இரு அணிகளும் சந்திக்க இருப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகமாகியுள்ளன.

மேலும், 1992 உலகக் கோப்பை தொடருடன் நடப்பு உலகக் கோப்பை தொடரை பாகிஸ்தான் ரசிகர்கள் ஒப்பிட்டு பேசிவருகின்றனர். இந்நிலையில், இம்ரான் கானை போலவே பாகிஸ்தான் அணியின் தற்போதைய கேப்டன் பாபர் அசாம் அந்த நாட்டின் பிரதமராக வருவார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய இந்திய அணியின் போட்டியின் வர்ணனையில் பேசியபோது நகைச்சுவையாக இதனை தெரிவித்தார் கவாஸ்கர். அதில், "பாகிஸ்தான் உலகக் கோப்பையை வென்றால், இன்னும் 26 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 2048இல் பாபர் அசாம் பாகிஸ்தானின் பிரதமராக வருவார்" எனச் சொல்ல சக வர்ணனையாளர்கள் சிரித்தனர். 

1992இல் உலகக் கோப்பையை வென்ற இம்ரான் கான் அதன்பின் 26 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் நாட்டின் பிரதமராகினார். அதேபாணியில் இந்த உலகக்கோப்பையை வென்றால் பாபர் அசாம் அடுத்த 26 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக வருவார்” என்று தெரிவித்தார். இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை