தினேஷ் கார்த்திக்கிற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் மனிந்தர் சிங்!
வரும் ஆகஸ்ட் 27 முதல் ஐக்கிய அரபு நாடுகளில் 2022 ஆசிய கோப்பை நடைபெறுகிறது. வரலாற்றில் 15ஆவது முறையாக நடைபெறும் இந்த தொடர் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 20 ஓவர் போட்டிகளாக நடைபெறுகிறது. ஆசிய கண்டத்தின் சாம்பியனை தீர்மானிக்கும் இந்த தொடரில் 6 அணிகள் பங்கேற்கும் நிலையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தனது முதல் போட்டியில் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
முன்னதாக இந்த தொடருக்கு அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் சேர்க்கப்பட்டதற்கு சில முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். குறிப்பாக கடைசி 4 ஓவர்களில் பினிஷிங் செய்வதற்காக மட்டும் தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டுள்ளது சரியான முடிவல்ல என்று முன்னாள் தமிழக வீரரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் போன்றவர்களே விமர்சித்துள்ளனர்.
ஏனெனில் மிடில் ஆர்டரில் களமிறங்கும் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா ஆகியோரும் பினிஷிங் செய்யும் திறமை பெற்றிருப்பதாக கூறும் முன்னாள் வீரர்கள் ரிஷப் பந்த், கேஎல் ராகுல் ஆகியோர் விக்கெட் கீப்பிங் செய்பவர்களாக இருக்கும் நிலையில் வெறும் பினிஷிங் செய்வதற்காக மட்டும் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்து அணியில் ஒரு இடத்தை வீணடிக்க வேண்டாம் என்று கருதுகின்றனர்.
ஆனாலும் 37 வயதுக்குப் பின் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் மற்றும் 2 ஆட்டநாயகன் விருது வென்ற இந்திய வீரராக சாதனை படைத்து வரும் அவரது திறமை மீது இந்திய அணி நிர்வாகமும் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்து வருகிறார்கள். அதனாலேயே இந்த ஆசிய கோப்பையில் தேர்வு செய்யப்பட்டுள்ள அவர் இதில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் டி20 உலகக்கோப்பைக்கு தேர்வாக பிரகாசமான வாய்ப்புகள் உள்ளது.
அப்படிப்பட்ட நிலையில் அணி நிர்வாகம் கேப்டன், பயிற்சியாளர் ஆகிய அனைவரின் ஆதரவைப் பெறும் அளவுக்கு அசத்தலாக செயல்பட்டு தினேஷ் கார்த்திக் தேர்வாகியுள்ள போது உங்களுக்கு என்ன பிரச்சனை என்று அவர் மீதான விமர்சகர்களுக்கு முன்னாள் இந்திய வீரர் மனிந்தர் சிங் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “இது நாம் செய்யும் ஒரு புதிய சோதனையாகும். மேலும் உலக கோப்பைக்கு முன்பாக இது போன்ற சோதனைகளை செய்வதில் எந்தத் தவறுமில்லை. ஒருவேளை இந்த சோதனை வெற்றி பெற்றால் விமர்சிக்கும் அனைவரும் “சிறப்பான வேலையை செய்துள்ளீர்கள்” என்று பாராட்டுவார்கள். அந்த வகையில் ஐபிஎல் தொடரில் அபாரமாக செயல்பட்டு நல்ல பார்மில் இருக்கும் தினேஷ் கார்த்திக்க்கு கடைசி கட்ட ஓவர்கள் மட்டுமல்லாது முன்கூட்டியே சில ஓவர்களில் களமிறங்கி விளையாடும் வாய்ப்பையும் வழங்கலாம்.
அத்துடன் ஒவ்வொரு கேப்டனும் வித்தியாசமான திட்டத்தை வகுப்பார்கள். எனவே நம்முடைய கேப்டன், பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழுவின் முடிவுக்கு நாம் ஆதரவு கொடுக்க வேண்டும். இதுபோன்ற புது சோதனைகளை செய்யும் அவர்கள் அதில் வெற்றி கிடைக்கவில்லையெனில் விட்டுவிடுவார்கள். ஆனால் சோதனை முயற்சிகளை தொடர்ந்து செய்ய வேண்டும். எனவே தினேஷ் கார்த்திக் நிறைய ஓவர்கள் பேட்டிங் செய்வதை பார்க்க நான் விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.