BANW vs INDW, 3rd ODI: கடைசி வரை போராடி வெற்றியை கோட்டைவிட்ட இந்திய அணி!

Updated: Sat, Jul 22 2023 19:52 IST
Image Source: Google

இந்திய மகளிர் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட ஐசிசி சாம்பியன்ஷிப் தொடரிலும் பங்கேற்றது. ஏற்கனவே நடந்து முடிந்த 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய மகளிர் அணி 2-1 என்ற் கணக்கில் கைப்பற்றியது.

இதையடுத்து 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட ஐசிசி சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதில், முதல் ஒரு நாள் போட்டியில் டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி வங்கதேச மகளிர் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2ஆவது ஒரு நாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 108 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதியாக இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி டாக்காவில் உள்ள ஷேர் பங்களா தேசிய மைதானத்தில் இன்று நடந்தது.

இதில், வங்கதேச மகளிர் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, அந்த அணியின் தொடக்க வீராங்கனையான ஃபர்கானா ஹோக் நிலையான நின்று 107 ரன்கள் சேர்த்தார். மற்றொரு தொடக்க வீராங்கனை ஷமிமா சுல்தானா 52 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்தது. அதன் பிறகு வந்த கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பரான நாகர் சுல்தானா 24 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, ஷோபனா மோஸ்தரி 23 ரன்கள் எடுக்க வங்கதேச மகளிர் அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பின்னர், எளிய இலக்கை துரத்திய இந்திய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த யாஸ்டிகா பாட்டியா 5 ரன்களில் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 59 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் இந்திய அணி 38 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 173 ரன்கள் எடுத்திருந்தது. 

அப்போது மழை குறுக்கிட்டது. சிறிது நேரத்திலேயே மழை விடவே போட்டி ஓவர்கள் குறைக்கப்படாமல் மீண்டும் தொடங்கப்பட்டது. ஒருவேளை தொடர்ந்து மழை பெய்திருந்தால் டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி 38 ஓவருக்கு வங்கதேச அணி 151 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால், இந்திய அணியோ 38 ஓவர்களில் 173 ரன்கள் எடுத்துவிட்டது. இதன் மூலமாக இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கும்.

ஆனால் அதன்பின் தொடங்கிய போட்டியில் ஹர்லீன் தியோல் நிலையான நின்று ரன்கள் சேர்த்தார். அவர் 77 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்தவர்கள் ஓரிரு ரன்களில் வெளியேறவே கடைசி வரை போராடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 33 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக இந்திய மகளிர் அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 225 ரன்கள் எடுக்க போட்டி டிராவானது. கூடுதலாக ஒரு ரன் எடுத்திருந்தால் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும். எனினும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை இரு அணிகளும் 1-1 என்று சமன் செய்துள்ளன.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை