BAN vs IND 2nd Test: இரண்டாவது டெஸ்டிலிருந்தும் விலகினார் ரோஹித் சர்மா!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள், 2 டெஸ்டுகளில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி, முதல் டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி 22ஆம் தேதி தொடங்குகிறது. ஏற்கெனவே காயம் காரணமாக இந்தத் தொடரின் முதல் போட்டியிலிருந்து ரோஹித் சா்மா விலகிய நிலையில், அவருக்குப் பதிலாக கே.எல்.ராகுல் இந்திய அணி கேப்டன் பொறுப்பேற்றுள்ளாா்.
அடுத்த ஆண்டு ஜூனில் நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கு இந்தியா தகுதிபெற இந்தத் தொடா் மிக முக்கியமானதாகும். இதன் இரு ஆட்டங்களில் வெல்வதோடு, அடுத்து சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுடன் மோதும் 4 ஆட்டங்களிலும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இந்தியா.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், அவரது காயம் குணமடையாததால் இப்போட்டியிலிருந்தும் அவர் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக இப்போட்டியிலும் கேஎல் ராகுலே இந்திய அணியை வழிநடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் வங்கதேச அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் எபோடட் ஹொசைன் காயம் காரணமாக விலகியுள்ளார். முன்னதாக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் போது அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும், தற்போது மருத்துவ சிகிச்சை பெற்றுவருவதாகவும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.