மழையால் கைவிடப்பட்டது வங்கதேசம் - நியூசிலாந்து ஆட்டம்!

Updated: Thu, Sep 21 2023 21:58 IST
மழையால் கைவிடப்பட்டது வங்கதேசம் - நியூசிலாந்து ஆட்டம்! (Image Source: Google)

இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கு தயாராகும்  வகையில் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. அதன் ஒருபகுதியாக நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது.

உலகக்கோப்பை தொடருக்கு இந்த தொடரை பயன்படுத்தி தங்களது சீனியர் வீரர்களை நியூசிலாந்து அணி தயார்படுத்தும் என நினைத்த வேளையில் இந்த தொடரில் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து துணை கேப்டன் டாம் லதாம், டிம் சவுதி, மிட்செல் சாண்ட்னர், டெவான் கான்வே, மிட்செல் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்களை கொண்ட அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த தொடருக்கான நியூசிலாந்து அணிக்கு லோக்கி ஃபர்குசன் தலைமை தாங்குகிறார்.

அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று மிர்புரில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி நியூசிலாந்து அணி இன்னிங்ஸைத் தொடங்கிய நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தடைப்பட்டு மீண்டும் தொடங்கிய நிலையில், டக்வொருத் லூயிஸ் முறைப்படி ஆட்டம் 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 

இதையடுத்து விளையாடிய நியூசிலாந்து அணியில் ஃபின் ஆலன் 9 ரன்களுக்கும், சாத் பௌஸ் ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் இணைந்த வில் யங் - ஹென்றி நிக்கோலஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் வில் யங் அரைசதம் கடந்தார். பின் 58 ரன்களுக்கு வில் யங் ஆட்டமிழக்க, 44 ரன்களுக்கு ஹென்றி நிக்கோலஸ் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

அதன்பின் நியூசிலாந்து அணி 33.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் எடுத்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டு ஆட்டம் தடைபட்டது. பின் தொடர்ந்து பெய்த மழை காரணமாக இப்போட்டி அத்துடன் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கு இடையேயான இப்போட்டி முடிவில்லாமல் அமைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை