BAN vs NZ, 1st Test: நஜ்முல் ஹொசைன் சதம்; வலிமையான நிலையில் வங்கதேசம்!
நியூசிலாந்து - வங்கதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 28-ந் தேதி தொடங்கியது. முதலில் வங்கதேசம் அணி பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேசம் அணி முதல் இன்னிங்சில் 310 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து அணி தரப்பில் பிலிப்ஸ் 4 விக்கெட்டுகளையும் அஜாஸ் படேல், ஜெமிசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
இதனையடுத்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. வில்லியம்சனின் சதம் மூலம் நியூசிலாந்து அணி 317 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 7 ரன்கள் முன்னிலை பெற்றது. வங்கதேசம் தரப்பில் தைஜுல் இஸ்லாம் 4 விக்கெட்டுகளையும் மோமினுல் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
இதனையடுத்து வங்கதேசம் அணி 2ஆவது இன்னினஙஸை தொடங்கியது. அந்த அணி 26 ரன்கள் முதல் 2 விக்கெட்டுகளை இழந்தது. அணியின் தொடக்க வீரர்கள் மஹ்முதுல் ஹசன் 8 ரன்களுக்கும், ஸகிர் ஹசன் 17 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். அதை தொடர்ந்து நஜ்முல் ஹொசைன் சாண்டோ- மொமினுல் ஹக் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். இந்த ஜோடி 3ஆவது விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்தது.
அதன்பின் 40 ரன்களில் மொமினுல் ஹக் துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். இதனையடுத்து நஜ்முல் ஹொசைன் சாண்டோவுடன் முஷ்பிக்கூர் ரஹீம் ஜோடி சேர்ந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நஜ்முல் ஹொசைன் சதம் அடித்து அசத்தினார். இதன்மூலம் வங்கதேச அணி 3ஆவது நாள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் எடுத்தது.
இதில் நஹ்முல் ஹொசைன் சாண்டோ 104 ரன்களையும், முஷ்பிக்கூர் ரஹிம் 43 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து அணி தரப்பில் அஜாஷ் படேல் 1 விக்கெட்டை வீழ்த்தினார். இதையடுத்து 205 ரன்கள் முன்னிலையுடன் வங்கதேச அணி நாளை நான்காம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.