BAN vs NZ, 3rd ODI: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது நியூசிலாந்து!
இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. அதன் ஒருபகுதியாக நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது.
இத்தொடரின் முதல் போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டும், இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியும் வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு தன்சித் ஹசன் 5 ரன்களுக்கும், ஸகிர் ஹசன் ஒரு ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் களமிறங்கிய கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய தாஹித் ஹிரிடோய், முஷ்பிக்கூர் ரஹிம் ஆகியோர் தலா 18 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
இதனையடுத்து களமிறங்கிய மஹ்மதுல்லா, மெஹிதி ஹசன் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்து 76 ரன்களை எடுத்திருந்த நஜ்முல் ஹொசைன் சாண்டோவும் விக்கெட்டை இழந்தார். இதனால் வங்கதேச அணி 34.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் ஆடம் மில்னே 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதன்பின் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஃபின் ஆலன் - வில் யங் இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். இதில் ஃபின் ஆலன் 28 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய டீன் ஃபாக்ஸ்கிராஃப்ட் முதல் பந்திலேயே விக்கெட்டை இழ்னது ஏமாற்மளித்தார். அதன்பின் வில் யங்குடன் இணைந்த ஹென்றி நிக்கோலஸும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.
இதில் வில் யங் 70 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹென்றி நிக்கோலஸ் அரைசதம் கடந்ததுடன் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் நியூசிலாந்து அணி 34.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் வென்றது.