BAN vs SA, 1st Test: வங்கதேசத்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அசத்தல் வெற்றி!

Updated: Thu, Oct 24 2024 11:50 IST
Image Source: Google

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தவகையில், வங்கதேசம் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தாக்காவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஷேர் பங்களா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் அதிகபட்சமாகவே தொடக்க வீரர் ஷாத்மான் இஸ்லாம் 30 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அதிலும் குறிப்பாக அணியின் நட்சத்திர வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளிததனர். இதனால் வங்கதேச அணியானது முதல் இன்னிங்ஸில் 106 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய காகிசோ ரபாடா மற்றும் வியான் முல்டர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.  

அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த தென் ஆப்பிரிக்க அணியும் தொடக்கத்திலேயே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் கைல் வெர்ரைன் மற்றும் வியான் முல்டர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் கைல் வெர்ரைன் சதமடித்து அசத்தியதுடன் 114 ரன்களையும், மறுபக்கம் அரைசதம் கடந்த வியான் முல்டர் 54 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 308 ரன்களைச் சேர்த்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல அவுட்டானது. வங்கதேச தரப்பில் தைஜுல் இஸ்லாம் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து 202 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த வங்கதேச அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்த நிலையில், மஹ்முதுல் ஹசன் 40 ரன்னிலும், முஷ்ஃபிக்கூர் ரஹீம் 33 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழந்தனர். பின்னர், ஜோடி சேர்ந்த மெஹிதி ஹசன் மிராஸ் மற்றும் ஜகார் அலி இணை அபாரமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியதுடன் அரைசதம் கடந்தும் அசத்தினர். இதில் ஜகார் அலி 58 ரன்னில் ஆட்டமிழக்க,  வங்கதேச அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 283 ரன்களைச் சேர்த்தது.

இந்நிலையில் இன்று தொடங்கிய நான்காம் நாள் அடடத்தை இதில் மெஹிதி ஹசன் மிராஸ் 87 ரன்களுடனும், நயீம் ஹசன் 16 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் நயீம் ஹசன் 16 ரன்னிலும், தைஜுல் இஸ்லாம் 7 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, மறுபக்கம் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மெஹிதி ஹசன் 97 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் வங்கதேச அணி 307 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் காகிசோ ரபாடா 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்கதேச அணி விளையாடியது. 

அந்த அணிக்கு டோனி டி ஸோர்ஸி மற்றும் ஐடன் மார்க்ரம் இணை தொடக்கம் கொடுத்தார். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 42 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில், கேப்டன் ஐடன் மார்க்ரம் 20 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து அணியின் மற்றொரு தொடக்க வீரரான டோனி டி ஸோர்ஸியும் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 42 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய டேவிட் பெட்டிங்ஹாம் 12 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். 

Also Read: Funding To Save Test Cricket

ஆனாலும் மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் 30 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 22 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய கைல் வெர்ரைன் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை