BAN vs SL, 1st Test: மேத்யூஸ் சதத்தால் வலிமையான நிலையில் இலங்கை!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் கேப்டன் திமுத் கருணரத்னே 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஒஷாதா ஃபெர்னாண்டோ - குசால் மெண்டிஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் ஃபெர்னாண்டோ 36 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மறுமுனையிலிருந்த குசால் மெண்டிஸ் அரைசதம் கடந்த கையோடு 54 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த தனஞ்செய டி சில்வாவும் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த ஏஞ்சலோ மெத்யூஸ் - தினேஷ் சண்டிமல் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை மளமளவென உயர்த்தின. இதில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மேத்யூஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 12ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
இதன்மூலம் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்களைச் சேர்த்துள்ளது. இலங்கை தரப்பில் மேத்யூஸ் 114 ரன்களுடனும், சண்டிமல் 34 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.