வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இலங்கை அணியானது தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒருவெற்றியைப் பதிவுசெய்தன. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. 

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு தனஞ்செயா டி சில்வா - குசால் மெண்டிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தனஞ்செயா டி சில்வா 8 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் கமிந்து மெண்டிஸ் 12 ரன்களிலும், கேப்டன் வநிந்து ஹசரங்கா 15 ரன்களுக்கும், சரித் அசலங்கா 3 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். 

Advertisement

இருப்பினும் மற்றொரு தொடக்க வீரரான குசால் மெண்டிஸ் அரைசதம் கடந்ததுடன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த குசால் மெண்டிஸ் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 6 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 86 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

அதன்பின் அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட ஏஞ்சலோ மேத்யூஸ் 10 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, இறுதிவரை களத்தில் இருந்த தசுன் ஷனகா 19 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினீஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை குவித்தது. வங்கதேச அணி தரப்பில் தஸ்கின் அஹ்மத், ரிஷாத் ஹொசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணிக்கு லிட்டன் தாஸ் - சௌமியா சர்க்கார் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் லிட்டன் தாஸ் 7 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் இன்னிங்ஸின் நான்காவது ஓவரை இலங்கை அணியின் நுவான் துஷாரா வீச, அதனை எதிர்கொண்ட நஜ்முல் ஹொசைன் சண்டோ, தாவ்ஹித் ஹிரிடோய், மஹ்முதுல்லா ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

இதன்மூலம் நுவான் துஷாரா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன்பி சௌமியா சர்க்கார் 11 ரன்களுக்கும், ஜகார் அலி 4 ரன்களுக்கும், மெஹிதி ஹசன் 19 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய ரிஷாத் ஹசன் - தஸ்கின் அஹ்மத் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் விக்கெட் இழப்பையும் தடுத்தனர். 

Advertisement

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷாத் ஹசன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் 7 சிக்சர்களுடன் 53 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 30 ரன்கள் எடுத்திருந்த தஸ்கின் அஹ்மதும்தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 19.4 ஓவர்களில் வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இலங்கை அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய நுவான் துஷாரா 5 விக்கெட்டுகளையும், கேப்டன் வநிந்து ஹசரங்கா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதன்மூலம் இலங்கை அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இப்போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய நுவான் துஷாரா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News