வங்கதேச டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடித்த ஷாகிப் அல் ஹசன்!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணி மூன்று டி20, மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இலங்கை அணி கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரை வங்கதேச அணி கைப்பற்றி அசத்தியது. இதைனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
அதன்படி மார்ச் 22ஆம் தேதி சில்ஹெட்டில் நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 328 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி மார்ச் 30ஆம் தேதி சட்டோகிராமில் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் இப்போட்டிக்கான வங்கதேச அணியில் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் மீண்டும் இடம்பிடித்துள்ளார். முன்னதாக கடந்தாண்டு அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஷாகிப் அல் ஹசன் அதன்பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் பங்கேற்காமல் தவிர்த்து வந்தார். அதேபோல் இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு பிறகு அவர் எந்தவித சர்வதேச கிரிக்கெட்டிலும் இடம்பிடிக்காமல் இருந்தார்.
தற்போது அவர் மீண்டும் வங்கதேச டெஸ்ட் அணியில் இடம்பிடித்திருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே முதல் டெஸ்ட் போட்டியை இழந்துள்ள வங்கதேச அணி ஷாகிப் அல் ஹசனின் வருகையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வலிமை பெறும் என எதிர்பர்க்கப்படுகிறது. இதுவரை 66 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஷாகிப் அல் ஹசன் 5 சதம், 31 அரைசதங்களுடன் 4,454 ரன்களையும், 233 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கதேச அணி: நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), ஸாகிர் ஹசன், மஹ்முதுல் ஹசன் ஜாய், ஷத்மன் இஸ்லாம், லிட்டன் தாஸ், மொமினுல் ஹக், ஷாகிப் அல் ஹசன், ஷஹாதத் ஹொசைன், மெஹிதி ஹசன் மிராஸ், நயீம் ஹசன், தைஜுல் இஸ்லாம், ஷோரிஃபுல் இஸ்லாம், கலீத் அகமது, நஹித் ரானா, ஹசன் மஹ்மூத்.