BANW vs INDW, 3rd T20I : இந்திய அணியை வீழ்த்தி வங்கதேசம் ஆறுதல் வெற்றி!

Updated: Thu, Jul 13 2023 22:02 IST
இந்திய அணியை வீழ்த்தி வங்கதேசம் ஆறுதல் வெற்றி (Image Source: Google)

வங்கதேசத்தில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது.இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி தாக்காவில் இன்று நடைபெற்றது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மாவும் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

இதையடுத்து ஜோடி சேர்ந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் - கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின் 28 ரன்களை எடுத்திருந்த ரோட்ரிக்ஸ் ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் 40 ரன்களுக்கு ஆட்டமிழதார்.

பின்னர் களமிறங்கிய யஸ்திகா பாட்டியா, அமஞோத் கவுர், பூஜா வஸ்திரேகர், தீப்தி சர்மா, மின்னு மணி என அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 102 ரன்களை மட்டுமே எடுத்தது. வங்கதேச அணி தரப்பில் ரபெயா கான் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணியில் தொடக்க வீராங்கனை ஷதி ராணி 10 ரன்களிலும், திலாரா அக்டர் ஒரு ரன்னிலும், கேப்டன் நிகர் சுல்தானா 14 ரன்களுக்கும், ஷொர்மா அக்டர் 2 ரன்களுக்கும், சுல்தானா கதும் 12 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

இருப்பினும் மறுபக்கம் மற்றொரு தொடக்க வீராங்கனை ஷமிமா சுல்தானா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதேசமயம் இறுதிவரை களத்தில் இருந்து ஆட்டத்தை முடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சுல்தானா 42 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

ஆனாலும் அணிக்கு தேவையான ரன்களைச் சுல்தானா சேர்த்ததன் மூலம்  வங்கதேச மகளிர் அணி 18.2 ஓவர்களில் இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் வங்கதேச அணி 2-1 என்ற கணக்கில் ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது. அதேசமயம் இந்திய அணி டி20 தொடரைக் கைப்பற்றியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை