இந்தத் தோல்வி மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது - ஜோஸ் பட்லர்!
இன்றைய கிரிக்கெட் உலகில் மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் சிறந்த பந்துவீச்சாளர்கள் பேட்ஸ்மேன்கள் ஆல் ரவுண்டர்களை கொண்டு மிகப்பெரிய பலமான அணியாக இங்கிலாந்து அணி வலம் வந்து கொண்டிருக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் தொடர் உலகக் கோப்பையில் சாம்பியன் ஆன இங்கிலாந்து அணி, கடந்த ஆண்டு ஆஸ்திரேலியவில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையிலும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இன்னொரு பக்கத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசாதாரணமான அதிரடி ஆட்ட அணுகு முறையில் விளையாடி எதிர் அணிகளை நிலைகுலைய செய்து கொண்டு வருகிறது இங்கிலாந்து அணி. இவர்கள் பேட்டிங் செய்யும் வேகத்திற்கு எதிரணிகளால் ஈடு கொடுப்பதற்கு மிகவும் கடினமாக இருக்கிறது. மேலும் போட்டியை எப்படியும் முடிவு நோக்கி இங்கிலாந்து கொண்டு சென்று வெற்றி பெற்று வருகிறது.
இப்படி மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் கோலோச்சிக் கொண்டிருக்கும் இங்கிலாந்து அணி சமீபத்தில் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வந்தது. முதலில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றிய நிலையில், அடுத்து நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மூன்று போட்டிகளையும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக வங்கதேசம் அணியிடம் தோற்று மொத்தமாக தொடரை இழந்தது இங்கிலாந்து அணி.
இந்நிலையில் இத்தோல்வி குறித்து பேசிய ஜோஸ் பட்லர், “இந்தத் தோல்வி மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. ஆனாலும் சிறப்பாக விளையாடிய வங்கதேச அணிக்கு எனது வாழ்த்துக்கள். அவர்கள் வெளிப்படுத்திய விளையாட்டிற்கு இந்த வெற்றிக்கு தகுதியானவர்கள். நாங்கள் திரும்பி வந்தோம். ஆனால் எங்களுக்கு ஃபீல்டில் கிடைத்த நல்ல வாய்ப்புகளை தவற விட்டு விட்டோம்.
இந்த விக்கெட் விளையாடுவதற்கு நன்றாகவும் சரியான ஸ்கோரை கொடுத்ததாகவும் இருந்தது. ஆனால் இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை தொடர்ந்து இழந்தது பெரிய பிரச்சனையாகிவிட்டது. நான் அந்த நேரத்தில் டைவ் அடிக்காததற்கு வருத்தப்படுகிறேன். இந்த தோல்வி ஏமாற்றம் அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
வெற்றி பெற்ற பின் பேசிய வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன், “நாங்கள் இந்த டி20 தொடரில் மிகச் சிறப்பாக இருந்தோம். பேட்டிங் பந்துவீச்சு பீல்டிங் என மிகச் சிறப்பாக செயல்பட்டோம். இங்கிருந்து நாங்கள் அடுத்த டி20 உலக கோப்பைக்கு சிறப்பான முறையில் தயாராக வேண்டும். இந்த ட்ரிக்கி விக்கெட்டில் நாங்கள் பேட் செய்த விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்தடுத்த பந்தில் இரண்டு முக்கியமான விக்கட்டுகள் கிடைத்தது எங்கள் பக்கம் ஆட்டத்தை திருப்பியது. அடுத்து எங்களுக்கு அயர்லாந்துடனும் நல்ல சவாலான ஒரு தொடர் காத்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.