BAN vs ENG, 1st T20I: இங்கிலாந்தை வீழ்த்தி வங்கதேசம் அசத்தல் வெற்றி!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று சட்டோகிராமில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ஜோஸ் பட்லர் - பிலீப் சால் ட் இணை களமிறங்கினர். தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். பின் 38 ரன்களில் பிலிப் சால்ட் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த டேவிட் மாலனும் 4 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
ஆனால் மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ஜோஸ் பட்லர் அரைசதம் கடந்து அசத்தினார். இதற்கிடையில் பென் டக்கெட் 20 ரன்களில் ஆட்டமிழக்க, 43 பந்துகளில் தலா 4 பவுண்டரி, சிக்சர்களை விளாசி 67 ரன்களைச் சேர்த்திருந்த ஜோஸ் பட்லரும் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து 6 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த சாம் கரணும் விக்கெட்டை இழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவுல் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து, 156 ரன்களைச் சேர்த்துள்ளது. வங்கதேச அணி தரப்பில் ஹசன் மஹ்மூத் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீரர் ரோனி தலுக்தர் 21 ரன்களிலும், லிட்டான் தாஸ் 12 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். பின்னர் ஜோடி சேர்ந்த நஜ்முல் ஹொசைன் - டவ்ஹித் ஹ்ரிடோய் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். பின் ஹ்ரிடோய் 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதனைத்திடர்ந்து நஜ்முலுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ஷாகிப் அல் ஹசனும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. அதன்பின் அரைசதம் கடந்த நஜ்முல் ஹொசைன் சாண்டோ 51 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இறுதிவரை களத்தில் இருந்த ஷாகில் அல் ஹசன் 34 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.
இதன்மூலம் வங்கதேச அணி 18 ஓவர்களில் இலக்கை எட்டி, 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் வங்கதேச அணி 1-0 என்ற கணக்கில் டி20 தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.