இந்திய மகளிர் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் முதல் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. அதன்படி சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. 

Advertisement

அதன்படி விளையாடிய வங்கதேச அணியில் திலார அக்தர் 10 ரன்களுக்கும், சோபனா 19 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் நிகர் சுல்தானா 6 ரன்களிலும், ஃபஹிமா கதும் ரன்கள் ஏதுமின்றியும், சுல்தானா கதும் 4 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். பின்னர் முர்ஷிதா கதுமுடன் இணைந்த ரிது மோனி ஓரளவு தாக்குப்பிடித்து விக்கெட் இழப்பை தடுத்தார். 

Advertisement

அதன்பின் 20 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரிது மோனி தனது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த முர்ஷிதா கதும் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 46 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 119 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ராதா யாதவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய மகளிர் அணிக்கு ஷஃபாலி வர்மா - ஸ்மிருதி மந்தனா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் அதிரடி வீராங்கனை ஷஃபாலி வர்மா எதிர்கொண்ட முதல் பந்திலேயே தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய தயாளன் ஹேமலதா முதல் பந்திலிருந்தே அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். 

தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தயாளன் ஹேமலதா 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 41 ரன்களைச் சேர்த்த நிலையில் மழை குறுக்கிட்டது. அச்சமயத்தில் இந்திய அணி 5.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 47 ரன்களைச் சேர்த்திருந்தது. அதன்பின்னும் மழை நீடித்த காரணத்தால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இந்திய மகளிர் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News