SA vs PAK, 1st ODI: முதல் ஒருநாள் போட்டியில் டெம்பா பவுமாவிற்கு ஓய்வு!
பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது நடைபெறவுள்ளது.
இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை (டிசம்பர் 17) பார்லில் நடைபெறவுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்க அணியானது ஏற்கெனவே டி20 தொடரை வென்ற உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்வதால், இதிலும் வெற்றிபெற்று ஒருநாள் தொடரையும் வெல்லும் முனைப்பில் களமிறங்கும். மறுபக்க டி20 தொடரை இழந்துள்ள பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரில் அதற்கான பதிலடியை கொடுக்கும் முனைப்பிலும் விளையாடவுள்ளது.
இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேற்கொண்டு இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பணிச்சுமை காரணமாக தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமாவிற்கு ஓய்வளிக்கப்படுவதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
ஏனெனில் தென் ஆப்பிரிக்க அணி எதிர்வரும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. மேலும் இதில் ஏதெனும் ஒரு டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும். இதன் காரணமாக சிறப்பான ஃபார்மில் இருக்கும் பவுமாவிற்கு பணிச்சுமையை சமாளிக்கும் விதமாக இந்த ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
டெம்பா பவுமா விளையாடாத நிலையில் தென் ஆப்பிரிக்க அணியை ஐடன் மார்க்ரம் வழிநடத்துவார் என்றும் என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதேசமயம் இந்த ஒருநாள் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் அவர் விளையாடுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கொண்டு காகிசோ ரபாடா, மார்கோ ஜான்சென், கேசவ் மஹாராஜ் உள்ளிட்டோருக்கு அடுத்தடுத்த போட்டிகளில் ஓய்வளிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
Also Read: Funding To Save Test Cricket
தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணி: டெம்பா பவுமா (கேப்டன்), ஒட்னியல் பார்ட்மேன், டோனி டி ஸோர்ஸி, மார்கோ ஜான்சென், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மஹாராஜ், குவேனா மஃபாகா, ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, ககிசோ ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கல்டன், தப்ரைஸ் ஷம்சி, ரஸ்ஸி வான் டெர் டுசென்.