பிபிஎல் 2022: மார்கஸ் ஸ்டொய்னிஸ் அதிரடியில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸை வீழ்த்தியது மெல்போர்ன் ஸ்டார்ஸ்!
பிக்பேஷ் லீக் டி20 தொடரின் 12ஆவது சீசன் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 23ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் - அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு ஜோ கிளார்க் - தாமஸ் ரோஜர்ஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜோ கிளார்க் 42 பந்துகளில் ஆட்டமிழக்க, தாமஸ் ரோஜர்ஸ் 30 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
அதன்பின் களமிறங்கிய வெப்ஸ்டர், கார்ட்ரைட் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மார்கஸ் ஸ்டோய்னிஸ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்ததுடன், அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினார். அதிலும் 18வது ஓவரில் ஸ்டோய்னிஸ் 4 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 28 ரன்களை விளாசி, 35 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 74 ரன்களை குவித்தார். அவரது அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்களை குவித்தது.
இதையடுத்து 187 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணியின் தொடக்க வீரர் மேத்யூ ஷார்ட் 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, அடுத்து வந்த கிறிஸ் லின்னும் 21 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஆடம் ஹோஸ் - ஹென்றி ஹண்ட் ஆகியோர் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்
இதில் ஹென்ரி ஹண்ட் 49 ரன்கள் அடித்து அரைசதத்தை தவறவிட்டார். அதன்பின்னர் ஆடம் ஹோஸ் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தாலும், 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ரஷீத் கான் கடைசியில் 14 பந்தி ல் 24 ரன்கள் அடித்து வெற்றிக்காக போராடியபோதிலும், 20 ஓவரில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணியால் 178 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
இதன்மூலம் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.