பிபிஎல் 2022: மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தி சிட்னி சிக்சர்ஸ் அபார வெற்றி!
பிக்பேஷ் டி20 லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி சிட்னியில் நடந்தது. டாஸ் வென்ற சிட்னி சிக்ஸர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் தொடக்க வீரர் ரோஜர்ஸ் தாமஸ் ரன் ஏதுமின்றியும், ஜோ கிளார்க் 27 ரன்களிலும், ஜேம்ஸ் 6 ரன்களோடும் பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். பின்னர் களமிறங்கிய வெப்ஸ்டர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய வெப்ஸ்டெர் அரைசதம் அடித்தார். 51 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 78 ரன்களை குவித்தார். மற்ற வீரர்கள் சோபிக்காததால் 20 ஓவர்கள் முடிவில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 150 ரன்கள் மட்டுமே அடித்தது
இதையடுத்து 151 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சிட்னி சிக்ஸர்ஸ் அணியின் தொடக்க வீரர் பேட்டர்சன் 24 ரன்களும், 3ஆம் வரிசையில் இறங்கிய ஜேம்ஸ் வின்ஸ் 33 ரன்களும் அடித்தனர். ஜோஷ் ஃபிலிப் ஒரு ரன் மட்டுமே எடுத்து ஏமாற்றமளித்தார்.
பின்னர் அதிரடியாக விளையாடிய கேப்டன் மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ் 32 பந்தில் 52 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்று சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.
இதன்மூலம் சிட்னி சிக்சர்ஸ் அணி கடைசி ஓவரின் முதல் பந்தில் இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹென்றிக்ஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.