பிபிஎல் 12: கில்க்ஸ் அதிரடியில் சிட்னி தண்டர் அபார வெற்றி!

Updated: Thu, Jan 19 2023 21:54 IST
Image Source: Google

ஆஸ்திரேலியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான பிக் பேஷ் லீக்கின் 12ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் - சிட்னி தண்டர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய ரெனிகேட்ஸ் அணியில் ஜேக் ஃப்ரசெர் 5 ரன்களிலும், சாம் ஹார்பர் 8 ரன்களிலும் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த மார்ட்டின் கப்தில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 30 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.

பின்னர் களமிறங்கிய கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் ஒருமுனையில் நிதானம் காட்ட, வெல்ஸ், மத்தேயு கிரிட்ச்லி ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து ஃபிஞ்சும் 22 ரன்களோடு பெவிலியன் திரும்பினார். இறுதியில் சதர்லெண்ட் அதிரடியாக விளையாடி 23 பந்துகளில் 3 சிக்சர், 2 பவுண்டரி என 42 ரன்களைச் சேர்த்தார்.

இதன்மூலம் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்களைச் சேர்த்தது. சிட்னி தண்டர் அணி தரப்பில் கிறிஸ் கிரீன் மற்றும் உஸ்மான் காதிர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய சிட்னி தண்டர் அணிக்கு மேத்யூ கில்ஸ் - டேவிட் வார்னர் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் வார்னர் 26 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஒலிவியர் டேவிஸ் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

இருப்பினும் அதிரடியில் மிரட்டிய கில்ஸ் அரைசதம் கடந்தார். அவருடன் இணைந்த அலெக்ஸ் ரோஸும் அதிரடியாக விளையாட 18.3 ஓவர்களில் சிட்னி தண்டர் அணி இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை