பிபிஎல் 13: சிட்னி தண்டரை பந்தாடியது அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ்!

Updated: Sun, Jan 14 2024 22:24 IST
பிபிஎல் 13: சிட்னி தண்டரை பந்தாடியது அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ்! (Image Source: Google)

பிக் பேஷ் லீக் தொடரின் 13ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 37ஆவது லீக் ஆட்டத்தில் சிட்னி தண்டர் மற்றும் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த சிட்னி தண்டர் அணிக்கு அலெக்ஸ் ஹேல்ஸ் - டேவிட் வார்னர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டேவிட் வார்னர் 13 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 

அவரைத் தொடர்ந்து வந்த பான்கிராஃப்ட் 14 ரன்களுக்கும், ஒலிவியர் டேவிஸ் 4 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அலெக்ஸ் ஹேல்ஸும் 3 பவுண்டரி, 2 சிச்கர்கள் என 43 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.  இதனைத் தொடர்ந்து விளையாடிய அலெக்ஸ் ரோஸ் 16, மேத்யூ கில்க்ஸ் 18, கிறிஸ் கிறின் 19 ரன்கள் என ஆட்டமிழந்தார். 

பின்னர் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவற 19.2 ஓவர்களில் சிட்னி தண்டர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய லியாட் போப் 4 விக்கெட்டுகளையும், ஜெமி ஓவர்டன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய அடிலெய்ட் அணிக்கு கேப்டன் மேத்யூ ஷார்ட் - டி ஆர்சி ஷார்ட் இணை தொடக்கம் கொடுத்தனர்.

இதில் டி ஆர்சி ஷார்ட் 15 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் மேத்யூ ஷார்ட்டுன் இணைந்த ஜேக் வெதர்லெட் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி மேத்யூ ஷார்ட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மேத்யூ ஷார்ட் 4 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 74 ரன்களையும், ஜேக் வெதர்லெட் ஒரு பவுண்டரி, 4 சிச்கர்கள் என 47 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். 

இதன்மூலம் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 16.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 9 விக்கெட் வித்தியாசத்தில் சிட்னி தண்டரை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்திய லியாட் போப் ஆட்டநாயகனாக தேர்வுசெய்யப்பட்டார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை