BBL 2024-25: ஸ்கார்ச்சர்ஸை வீழ்த்தி ரெனிகேட்ஸ் த்ரில் வெற்றி!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் பிக் பேஷ் லீக் கிரிக்கெட் தொடரின் 14ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 10ஆவது லீக் போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மெல்போர்னில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய பெர்த் அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ஃபின் ஆலன், ஜென்னிங்ஸ், ஜோஷ் இங்கிலிஸ் மற்றும் கேப்டன் ஆஷ்டன் டர்னர் உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் அந்த அணி 35 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த கூப்பர் கனொலி மற்றும் மேத்யூ ஸ்பூர்ஸ் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் கூப்பர் கனொலி தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
அதேசமயம் மறுபக்கம் 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மேத்யூ ஸ்பூர்ஸ் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நிக் ஹாப்சன், ஆஷ்டன் அகர் உள்ளிட்டோரும் சொற்ப் ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்து விளையாடி வந்த கூப்பர் கனோலி ஒரு பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 66 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பெர்த் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை மட்டுமே சேர்த்தது. மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி தரப்பில் தாமஸ் ரோஜர்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய மெல்போர்ன் ரெனிகேட்ஸுக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ஜோஷ் பிரௌன் 12 ரன்னிலும், ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் 2 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த டிம் செய்ஃபெர்ட் - ஜேக்கப் பெத்தேல் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் டிம் செய்ஃபெர்ட் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 28 ரன்னிலும், ஜேக்கப் பெத்தேல் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 30 ரன்களை எடுத்திருந்த கையோடு விக்கெட்டை இழந்தனர்.
Also Read: Funding To Save Test Cricket
பின்னர் களமிறங்கிய வீரர்களில் லௌரி எவான்ஸ் 24 ரன்களையும், மெக்கன்ஸி ஹார்வி 9 ரன்னிலும், தாமஸ் ரோஜர்ஸ் 5 ரன்னிலும், ஓ நீல் 9 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் வில் சதர்லேண்ட் 15 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 2 விக்கெட் வித்தியாசத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய தாமஸ் ரோஜர்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.