பிபிஎல் 2024-25: வார்னர், அகர் அசத்தல்; சிட்னி தண்டர் த்ரில் வெற்றி!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பேஷ் லீக் தொடரின் 14ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 16ஆவது லீக் போட்டியில் சிட்னி தண்டர் மற்றும் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சிட்னியில் நடைபெற்ற் இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய சிட்னி தண்டர் அணிக்கு கேமரூன் பான்கிராஃப்ட் மற்றும் கேப்டன் டேவிட் வார்னர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டேவிட் வார்னர் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுமுனையில் விளையாடிய கேமரூன் பான்கிராஃப்ட் 8 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 11 ரன்களுக்கும், ஒலிவியர் டேவிஸ் 10 ரன்களுக்கும், சாம் பில்லிங்ஸ் 10 ரன்களுக்கும் என சீரான வேகத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டேவிட் வார்னர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருடன் இணைந்து மேத்யூ கில்க்ஸும் ஓராளவு தாக்குப்பிடித்தார். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டேவிட் வார்னர் 10 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 86 ரன்களையும், மேத்யூ கில்க்ஸ் 23 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் சிட்னி தண்டர் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களைச் சேர்த்தது. ரெனிகேட்ஸ் அணி தரப்பில் டாம் ரோஜர்ஸ், கேன் ரிச்சர்ட்சன், சதர்லேண்ட், ஸாம்பா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்கு ஜேக் பிரௌன் - ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் விக்கெட்டிற்கு 34 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதில் ஜோஷ் பிரௌன் 22 ரன்னிலும், அடுத்து களமிறங்கிய டிம் செய்ஃபெர்ட் 9 ரன்னிலும், ஜேக்கப் பெத்தெல் 2 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் 26 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
Also Read: Funding To Save Test Cricket
அதன்பின் களமிறங்கிய லௌரி எவான்ஸ் ஒருப்பக்கம் அதிரடியாக விளையாடி 4 சிக்ஸர்களுடன் 40 ரன்களையும், தாமஸ் ரோஜர்ஸ் 23 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்களை மட்டுமே சேர்த்தது. சிட்னி அணி தரப்பில் வெஸ் அகர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் சிட்னி தண்டர் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.