ஃபீல்டிங்கில் காயமடைந்த பான்கிராஃப்ட் & சாம்ஸ் - வைரலாகும் காணொளி!
பிக் பேஷ் லீக் தொடாரின் 14ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற 22ஆவது லீக் போட்டியில் சிட்னி தண்டர் மற்றுன் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியானது ஃபின் ஆலன் மற்றும் கூப்பர் கன்னொலி ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக ஃபின் ஆலன் 68 ரன்களையும், கூப்பர் கன்னொலி 43 ரன்களையும் சேர்த்தனர். சிட்னி தண்டர் தரப்பில் கிறிஸ் கிரீன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய தண்டர் அணியில் டேவிட் வார்னர் 49 ரன்களையும், மேத்யூ கில்க்ஸ் 43 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்த நிலையில், அடுத்து களமிறங்கிய வீரர்கள் போதிய ரன்களைச் சேர்க்காமல் விக்கெட்டுகளை இழந்தனர்.
இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததுடன் 39 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். அதிலும் குறிப்பாக கடைசி பந்தில் 3 ரன்கள் தேவை என்ற நிலையில் ரூதர்ஃபோர்ட் பவுண்டரி அடித்து அசத்தினார். இதன்மூலம் சிட்னி தண்டர் அணி கடிசி பந்தில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இந்நிலையில் இப்போட்டியின் போது சிட்னி தண்டர் அணி வீரர்கள் டேனியல் சம்ஸ் மற்றும் கேமரூன் பான்கிராஃப்ட் ஆகியோர் ஃபீல்டிங்கின் போது மோதி கீழே விழுந்து காயமடைந்த சமபவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்படி பெர்த் அணியின் இன்னிங்ஸின் 16ஆவது ஓவரை லோக்கி ஃபெர்குசன் வீசிய நிலையில், அதனை எதிர்கொண்ட கூப்பர் கன்னொலி ஸ்கொயர் லெக் திசையை நோக்கி சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் தூக்கி அடித்தார்.
ஆனால் பந்தில் போதிய வேகமில்லாத காரணத்தால் பந்து காற்றில் இருந்த நிலையில், அதனை கேட் பிடிக்கும் முயற்சியில் டேனியல் சம்ஸ் மற்றும் கேமரூன் பான்கிராஃப்ட் இருவரும் பந்தை நோக்கி ஓடினர். இதில் இருவரும் பந்தை மட்டுமே பார்த்து ஓடியதால் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். இதனால் இருவரும் பலத்த காயத்தை சந்தித்ததுடன் களத்திலேயே சுருண்டும் விழுந்தனர். இதனை பார்த்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
Also Read: Funding To Save Test Cricket
பின்னர் இருவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், இருவரும் காயத்திற்கு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் டேனியல் சாம்ஸ் மற்றும் கேமரூன் பான்கிராஃப்ட் இருவரும் காயமடைந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.