சாம்பியன் பட்டம் வென்ற இந்திய யு19 மகளிர் அணிக்கு பரிசுத்தொகையை அறிவித்தது பிசிசிஐ!
மகளிர் அண்டர்19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மலேசியாவில் நடைபெற்றது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய மகளி யு19 மற்றும் தென் ஆப்பிரிக்க மகளிர் யு19 அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கோலா லம்பூரில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க யு19 மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய யு19 மகளிர் அணியை பந்துவீச அழைத்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் அதிகபட்சமாக மீகே வான் வூரஸ்ட் 23 ரன்களையும், ஜெம்மா போத்தா 16 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க யு19 அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 82 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய அணி தரப்பில் கங்கோடி த்ரிஷா 3 விக்கெட்டுகளையும், பருனிகா சிசோடி, ஆயூஷி ஷகில் மற்றும் வைஷ்னவி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதன்பின் எளிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய யு19 அணியில் ஜி கமலினி 8 ரன்களில் ஆட்டமிழந்தாலும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கங்கோடி த்ரிஷா 8 பவுண்டரிகளுடன் 44 ரன்களையும், சனிகா சால்கே 4 பவுண்டரிகளுடன் 26 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
இதன்மூலம் இந்திய யு19 அணி 11.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க யு19 அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியது. இதன்மூலம் தொடர்ச்சியாக இரண்டாவது முறை இந்திய மகளிர் யு19 அணி யு19 டி20 உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இத்தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கங்கோடி த்ரிஷா ஆட்டநாயகி மற்றும் தொடர் நாயகி விருதை வென்றார்.
Also Read: Funding To Save Test Cricket
இந்நிலையில் ஐசிசி யு19 மகளிர் டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியை கௌரவிக்கும் வகையில், தலைமை பயிற்சியாளர் நுஷ்ரின் அல் காதிர் மற்றும் துணை ஊழியர்கள் தலைமையில் வெற்றி பெற்ற அணிக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.