பிசிசிஐ ஒப்பந்த பட்டியல்: ஏ கிரேடில் கோலி, ரோஹித், பும்ரா; நடராஜனுக்கு இடமில்லை!

Updated: Fri, Apr 16 2021 12:27 IST
BCCI announces annual player contracts, three players retained in A+ contract list (Image Source: Google)

சர்வதேச அளவிலான ஒருநாள், டெஸ்ட் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடும் வீரர்களின் ஒப்பந்தம் ஊதியத்தை அடிப்படையாக கொண்டு கிரேட் ஏ+, ஏ, பி, சி முதலிய பிரிவுகளில் ஒவ்வோர் ஆண்டும் இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், அக்டோபர் 2020 முதல் செப்டம்பர் 2021 வரையிலான நடப்பு ஆண்டுக்கான பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

இதில் பிசிசிஐ ஒப்பந்த வீரர்களில் கிரேட் ஏ+ இடம்பெறும் வீரர்களுக்கு ஏழு கோடி ரூபாயும், ஏ, பி மற்றும் சி பிரிவு வீரர்களுக்கு முறையே ஐந்து, மூன்று மற்றும் ஒரு கோடி ரூபாயும் ஊதியமாக வழங்கப்படுகிறது. இதில் ஏ+ கிரேடில் இடம் பிடிக்க வேண்டுமானால் மூன்று வடிவிலான போட்டிகளில் வீரர்கள் விளையாட வேண்டும். அதன்படி ஏ+ கிரேடில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.

ஏ கிரேடில் ரவிசந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, புஜாரா, ரஹானே, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட 10 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

அதேபோல் பி கிரேடு பட்டியலில் விருத்திமான்  சாஹா, உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார், சர்துல் தாகூர், மயாங்க் அகர்வால் உள்ளிட்ட 5 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

சி கிரேட் பட்டியலில்  குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, தீபக் சஹர், சுப்மன் கில், ஹனுமா விஹாரி, அக்ஷர் படேல், ஸ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், சாஹல், முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பிசிசிஐ வெளியிட்டுள்ள ஒப்பந்த பட்டியலில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் 3 வடிவிலான போட்டிகளில் அறிமுகமாகி சாதனை படைத்த தமிழ்நாடு வீரர் நடராஜன் பெயர் இடம்பெறவில்லை. இத்தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் விவாதப் பொருளானது.

ஆனால் பிசிசிஐயின் ஒப்பந்த பட்டியலில் இடம்பிடிக்க சில விதிமுறைகள் உள்ளன. அதன்படி இந்திய அணியில் பிசிசிஐ ஒப்பந்தம் பெற வேண்டும் என்றால் குறைந்தது 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருக்க வேண்டும். அல்லது 7 ஒருநாள் போட்டிகளில் ஆடி இருக்க வேண்டும். அதுவும் இல்லையென்றால் 10 டி 20 போட்டிகளில் ஆடி இருக்க வேண்டும்.

ஆனால் நடராஜன் இரண்டு ஒருநாள், ஒரு டெஸ்ட், நான்கு டி 20 போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார். இதன் காரணமாக பிசிசிஐயின் ஒப்பந்தப் பட்டியலில் நடராஜன் பெயர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை