இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமனம்!

Updated: Tue, Jul 09 2024 20:29 IST
Image Source: Google

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நடைபெற்று முடிம்ந்த டி20 உலகக் கோப்பை தொடருடன் நிறைவடைந்து. இதனையடுத்து புதிய பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பங்களை பிசிசிஐ வெளியிட்ட நிலையில், இப்பதவிக்கு சுமார் 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதிலிருந்து ஒரு சிலரை மட்டுமே பிசிசிஐ இறுதிசெய்ததாக தெரிவிக்கப்பட்டது. மேற்கொண்டு இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீரை பிசிசிஐ தேர்ந்தெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன.

மேலும் இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளர் இன்னும் நியமிக்கப்படாத நிலையில், ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியின் தற்காலிக பயிற்சியாளராக தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் விவிஎஸ் லக்ஷ்மண் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது. அதேசமயம் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ஏற்கனவே கௌதம் கம்பீர் மற்றும் டபிள்யூ.வி. ராமன் இருவரையும் பிசிசிஐ நேர்காணல் செய்தது. அவர்கள் இருவரில் கௌதம் கம்பீர் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வலம் வந்தன.

இருப்பினும், தலைமைப் பயிற்சியாளரை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பதிவின் மூலம் உறுதிசெய்துள்ளார். இதனையடுத்து வரவுள்ள இலங்கை அணிக்கு எதிரான தொடர் முதல் கௌதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்படவுள்ளார். இருப்பினும் அணியின் மற்ற பயிற்சியாளர்கள் குறித்து எந்தவொரு அறிவிப்பும் இதுவரை வெளியாகாததும் குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் கௌதம் கம்பீர் நியமனம் குறித்து ஜெய் ஷா தனது எக்ஸ் பதிவில், “இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீரை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தற்கால கிரிக்கெட் வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது, மேலும் கௌதம் இந்த மாறிவரும் சூழலை அருகில் இருந்து பார்த்துள்ளார். மேலும் அவர் தனது வாழ்நாள் முழுவதும் நெருக்கடிகளை சகித்துக்கொண்டு, பல்வேறு ரோலில் சிறந்து விளங்கியதால், இந்திய கிரிக்கெட்டையும் முன்னோக்கி வழிநடத்த கௌதம் சிறந்த நபர் என்று நான் நம்புகிறேன்.

 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இந்திய கிரிக்கெட்டை அடுத்தக் கட்டத்துக்கு அவர் எடுத்துச் செல்வார் என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறேன். இந்திய அணிக்காக அவர் தெளிவான திட்டத்தினை வைத்துள்ளார். அவரது அனுபவம் மற்றும் தெளிவான திட்டம் இந்த இரண்டும் அவரை தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கான சரியான நபராக மாற்றியுள்ளது. இந்த புதிய பயணத்தில் பிசிசிஐ அவருக்கு தங்களுடைய முழு ஒத்துழைப்பையும் வழங்கும்” என பதிவுசெய்துள்ளார். இதனையடுத்து அவர் எதிர்வரவுள்ள இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கு முன்னதாக தனது பதவியை ஏற்றுக்கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை