இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட ராகுல் டிராவிட் சம்மதம் - தகவல்!
டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக யார் செயல்படப்போகிறார் என்ற கேள்வி சூடுபிடித்துள்ளது. தற்போது பயிற்சியாளராக இருந்து வரும் ரவி சாஸ்திரி, மீண்டும் விண்ணப்பிக்க விருப்பம் தெரிவிக்காததால், அடுத்த பயிற்சியாளரை பிசிசிஐ அணுகியுள்ளது.
இந்திய அணியின் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே பதவி விலகியதில் இருந்து தற்போது வரை ரவி சாஸ்திரிதான் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையில் இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு பல தொடர்களை கைப்பற்றிய போதும் இதுவரை ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்லவில்லை. இதனால் அவர் மீது ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
வரும் டி20 உலகக்கோப்பை தொடருடன் அவரின் பதவிக்காலம் முடிவடைவதால் அடுத்த பயிற்சியாளருக்கான தேடுதலில் பிசிசிஐ திவீரமாக ஈடுபட்டு வருகிறது. அதன்படி வெளிநாட்டு பயிற்சியாளர்களை விரும்பாமல், இந்தியாவின் ஜாம்பவான்கள் ராகுல் டிராவிட், லட்சுமணன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அதற்கு ராகுல் டிராவிட் சம்மதிக்கவில்லை. எனினும் பிசிசிஐ தலைவர் கங்குலி, நிச்சயம் இந்திய பயிற்சியாளர் தான் இருக்க வேண்டும் என திட்டவட்டமாக இருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட ராகுல் டிராவிட் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இவரது பதவிக்காலம் அடுத்த 2 ஆண்டுகளுக்கு மட்டும் தான். அதாவது 2023 வரை தலைமை பயிற்சியாளராக இருப்பார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராகுல் டிராவிட் இந்திய ஏ அணி, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்திருக்கிறார். அதுமட்டுமல்ல சமீபத்தில் இலங்கை சென்ற இந்திய அணிக்கும் பயிற்சியாளராக இருந்து, சிறப்பாக செயல்பட்டார். இவர் தற்போது தேசிய அகாடமியின் தலைவராக இருக்கிறார். விரைவில் அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்திய அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
டி20 உலகக்கோப்பை தொடர் முடிந்த அடுத்த 3 நாட்களில் இந்தியாவுக்கு நியூசிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. எனவே ராகுல் டிராவிட் இந்திய அணிக்கு பயிற்சி வழங்கப்போகும் முதல் தொடராக இது இருக்கும்.