Ajit Agarkar On Mohammed Shami Snub: முகமது ஷமி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்வாளர்கள் குறித்து எழுந்த கேள்விகளுக்கு மத்தியில் அஜித் அகர்கர் தனது மௌனத்தைக் கலைத்துள்ளார்.

Advertisement

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகளை கொண்ட டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இத்தொடரில் பங்கேற்கும் ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய ஒருநாள் அணியும், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணியையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இதில் ஒருநாள் அணியின் துணைக் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேசமயம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அணியில் சேர்க்கப்படாதது பெரும் விவாதமாக வெடித்துள்ளது. ஏனெனில் கடந்த 2023ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் அபாரமாக செயல்பட்ட ஷமி, அத்தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு மேல் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்ததுடன், காயத்திற்காக அறுவை சிகிச்சையையும் மேற்கொண்டிருந்தார். 

பின்னர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் மூலம் கம்பேக் கொடுத்த ஷமி, அதில் பெரிதளவில் சிறப்பாக செயல்படவில்லை. இதனால் அவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடர், ஆசிய கோப்பை தொடரில் இருந்தும் விலக்கப்பட்டிருந்த நிலையில், தற்சமயம் ஆஸ்திரேலிய தொடரில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இதனால் அதிருப்தியடைந்த ஷமி, தனது உடற்தகுதி மற்றும் தேர்வாளர்கள் குறித்து கருத்துகளை தெரிவித்தது சர்ச்சையாக வெடித்துள்ளது. 

இந்த நிலையில், ​​இந்திய அணியின் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அகர்கர், "ஷமி இதுபோன்ற ஏதாவது சொல்லியிருந்தால், நான் அவருடன் பேச தயாராக இருக்கிறேன். அனைத்து வீரர்களும் என்னுடம் பேச நான் எப்போதும் நேரம் ஒதுக்கி வருகிறேன். கடந்த சில மாதங்களாக நான் அவருடன் பலமுறை பேசியுள்ளேன், ஆனால் அதை ஒரு பெரிய தலைப்புச் செய்தியாக மாற்ற விரும்பவில்லை" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் "ஷமி இந்தியாவுக்காக அற்புதமாக விளையாடியுள்ளார். ஆனால் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்பே, அவர் உடல் தகுதியுடன் இருந்தால், அவர் நிச்சயமாக அணியில் இருப்பார் என்று நாங்கள் கூறியிருந்தோம். எங்கள் உள்நாட்டு சீசன் இப்போதுதான் தொடங்கியுள்ளது, மேலும் அவரது உடற்தகுதி குறித்து நாங்கள் எந்த ஆபத்தையும் எடுக்க விரும்பவில்லை" என்று அவர் கூறினார்.

Also Read: LIVE Cricket Score

அஜித் அகர்கரின் இந்த கருத்தின் மூலம், முகமது ஷமியின் கிரிக்கெட் எதிர்காலத்திற்கு மேலும் சில வாய்ப்புகள் உள்ளது என்ற கருத்துகள் வெளிவருகின்றன. இருப்பினும் தற்சமயம் 35 வயதை எட்டியுள்ளதன் காரணமாக, அடுத்தடுத்த தொடர்களில் அவரால் விளையாட முடியுமா என்ற சந்தேகங்களும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. 

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News