தலைமைப் பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களை வெளியிட்டது பிசிசிஐ!
இந்தியாவில் கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடர் வரை அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் வரும் ஜூலை மாதத்துடன் ராகுல் டிராவிட்டின் பயிற்சிகாலம் முடிவடையவுள்ளது.
இந்நிலையில். இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளரை தேர்ந்தெடுப்பதற்கான வேலையை பிசிசிஐ தற்போது தொடங்கி உள்ளது. அதன்படி, தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பிசிசிஐக்கு வரும் 27ஆம் தேதி வரை அனுப்பலாம் என தெரிவித்துள்ளது. மேலும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 60 வயதிற்கு உட்பட்டவர்களாகவும், குறைந்தபட்சம் 30 டெஸ்ட் அல்லது 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்துள்ளது.
இவை எல்லாம் தாண்டி விண்ணப்பங்களில் இருந்து தேர்ந்து எடுக்கப்படுவோர் அடுத்தபடியாக நேர்காணல் மூலம் தேர்வாவர்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்த தலைமை பயிற்சியாளர் பதவிக்காக நியமிக்கபடுவோர் வருகிற ஜூலை 1ஆம் தேதி முதல் பொறுப்பேற்பார்கள் எனவும் மேலும் அவரது பதவிக்கலாம் வருகிற 2027ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதியோடு முடிவடையும் எனவும் தெரிவித்துள்ளனர்.